Showing posts with label தவசி. Show all posts
Showing posts with label தவசி. Show all posts

Thursday, 10 April 2014

சிறுகதை #4: பெருந்திணை: பிரிவு ஆற்றாமை



சித்திரை மாத இரவு. தலைக்கு மேல்  நட்சத்திரங்கள் செறிந்து தெளிவாக இருந்தது வானம்.குஞ்சு ரொம்பவே குழப்பமாகத்தான் இருந்தான், எந்த துக்கமோ சந்தோஷமோ அதை அனுபவிப்பதை விட அதை நோண்டி ஆராய்ந்து புதிர் அல்லாததை புதிராக நினைத்து பதில் தேடுகிறேன் என்று தன்னையே குழப்பிக்கறது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது இது நாள்வரை.  செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருந்தான். சாதாரன நாட்களாக இருந்தால் வானில் அகன்ட வெளியை நோக்கி அவற்றின் புதிர்களுக்கு விடைக்காண முயற்சிக்கலாம். இது அதுவும்  இல்லை. ஆனால் என்னவோ மல்லாக்க படுக்கப் போட்டு பெரியதொரு பாறையை நெஞ்சின் மீது ஏற்றி வைத்தது போல பாரம் கனத்தது. விலக்கும் தோறும் கனக்கும் போல. பாறையாகவே ஆகிவிட்டாலன்றி வேறு மார்க்கம் இல்லை என்று தோன்றியது.

Sunday, 9 March 2014

சிறுகதைகள் #3: நொந்தகுமாரன் கலம்பகம்


'அப்பானு ஒன்னெலாம் சொல்லி ரொம்ப நாளாச்சி, வெளிலதான் வா,போனு சும்மா கூப்பிட்றேன், உள்ளுக்குள்ள அந்த மரியாத கூட இல்ல உனக்கு, அத எப்பவோ நீ கெடுத்துக்கிட்ட, தள்ளிப் போ அங்க'

கோபத்தை இன்னும் வெளிப்படுத்தும் விதமாக கதவை ஓங்கி அறைந்துவிட்டு செருப்பை போட்டுக்கொண்டு கிளம்பினான் குமர். பின்பனி இரவு,கிட்டத்தட்ட தெரு அடங்கும் நேரம். நடக்கையில்  கோபத்தில் கொதித்துப் போயிருந்த இரத்தம் குளிருக்கு அடங்குவதாய் இல்லை. 

'இன்னும் கேட்டிருக்கனும் அவன,மூஞ்சி தொங்கி போச்சில்ல இப்ப உனக்கு, சாவுடா' உதிரியாக மனதுக்குள் திட்டிக்கொண்டே நடந்தான்.நெடு நாட்கள் அடக்கி வைத்திருந்தது,நிம்மதியாகவும் இருந்தது.வீழ்த்திவிட்ட நிம்மதி.

ஓரளவுக்கு சுள்ளுனு உறைக்கிற மாதிரியும் தெளிவாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் அனிச்சையாக இப்போது வெளிவந்தது மனநிறைவாகத்தான் இருந்தது. ஆச்சர்யமாகவும்தான், இல்லையென்றால் உணர்ச்சிவசப்பட வேண்டியதாய் இருந்திருக்கும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால்.பெருமூச்சொன்று விட்டுக்கொண்டான்.

தெரு அமைதியாகத்தான் இருந்தது,நாயொன்று வள்ளென்று குரைத்தது.கீழே கிடந்ததிலேயே கொஞ்சம் பெரிய கல்லை எடுத்து முழு பலத்தையும் பிரயோகித்து எறிந்தான்,அது எங்கோ விலகிச் சென்று சுவற்றில் அடித்து இரண்டாக உடைந்தது, இன்றில்லை என்னைக்குமே குறி சரியாக இருந்ததில்லை அது தெரிந்திருக்குமோ என்னவோ எந்த சலனமும் இன்றி நின்றிருந்தது அந்த நாய். 'சனியனே ஓடிடு' என்று ஆற்றாமையில் கத்திவிட்டு நடந்தான். எப்படினாலும் வீட்டுக்கு திரும்பி போகத்தான் வேண்டும் இது ஒன்றும் புதிதில்லை. இதற்க்குமுன் கூட இப்படி நடந்திருக்கிறது, ஆனால் அப்போதெல்லாம் கோபம் அதிகமாகி பேச்சே வராது, ஒரு முற்றிய சமயத்தில் 'வாய மூட்றா, பேசாத' சத்தமாக கத்திவிட்டு கிளம்பிவிடுவான், 'சே சரியா திட்டாம வந்துட்டோமே' என்று நினைத்து வருந்தியதுண்டு.

பெரும்பாலும் அப்பாதான்  முதலில்  சண்டையை ஆரம்பித்து வைப்பதால் அவர் நிலையாகத்தான் இருப்பார், இவனுக்கு ஆரம்பத்திலேயே உடல் சூடேறிவிடும். அவரின் புண்படுத்தும் வார்த்தைக்கான சரியான பதிலை சொல்லத் தெரியாமல் அழுத்தம் அதிகமாகி வாய் குழறி இயலாமையினால் ஒன்று எதையாவது போட்டு உடைப்பான் அல்லது ஒருமையில் பேசிவிட்டு கிளம்பிவிடுவான்.ஆனால் இந்த முறை நிதானமாக இருந்தான்.

நெடு நாட்கள் மனதுக்குள்ளே சொல்லிப்பார்த்துக் கொண்டான். தக்க தருணம் அமையும் வரை காத்திருப்பது. எதிராளி இங்கு தந்தையாதலால் வீழ்த்துவதென்பது எளிதான வழிதான். நிராகரித்தல், மகன் என்ற அந்த அடிப்படை நம்பிக்கையில் அவர் எடுத்துக்கொண்ட அக்கறையோ அத்துமீறலோ அல்லது எல்லா அப்பாக்களுக்கும் மகன்களை காட்டிலும் மகள்கள் மீது காட்டப்படும் அதீத பாசத்தின் உளவியலால் இயற்கையாகவே உள்ள அந்த புரிந்துகொள்ளமுடியாத பகையோ அது எதுவோ கன்றாவியோ அந்த அடிப்படையை நிராகரித்தல். இதை அவன் சிந்திக்காவிட்டாலும் நிராகரிப்பு என்பது இங்கு எளியதான ஒரு போர் தந்திரம் என்பதை இயல்பாகவே அறிந்திருந்தான்.

'எல்லாத்துக்கும் சேத்து வச்சி இன்னிக்கி சொல்லியாச்சு,எல்லா அப்பனுங்களும் இப்படித்தான் இருப்பனுங்களா,இல்லையே ஒவ்வொருத்தனும் அவனோட பையனுக்கு எப்டிலாம் சப்போர்ட் பண்றான்.இவனும் இருக்கானே எப்பப்பாரு குறை சொல்லிக்கிட்டே, அந்த மாதிரி சொல்லியே அது என்னோட குறை இல்லைனாலும் அப்படியே ஆக்கிட்டான்,ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு,சின்னப் பையனா இருக்கும்போதேதான் ஆரம்பிச்சிட்டான்,கூட படிக்கிறவன சொல்லிக் காட்டி திட்றது, அவனப் பார்த்து திருந்தேன்டா, அவன் மூத்திரத்தக் குடிடான்னு, அப்பவே அப்பிருக்கனும் இவன. ஒவ்வொரு விஷயத்துக்கும் இதுமாதிரியே சொல்லி என்னோட தன்னம்பிக்கை, சுயமதிப்பீடு எல்லாத்தையும் தகர்த்துட்டான். இன்னிக்கி சின்னதா எதாவது ஒன்னு செய்யனும்னா கூட எவ்வளவு சந்தேகம்,பயம்,அவநம்பிக்கை, வாழ்க்கையே கெடுத்துட்டான் ஒத்தா நல்லா வாயில வருது' வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.
ஏதோ படித்து,ஏதோ வளர்ந்து,ஏதோ ஒரு பட்டம் பெற்று ஏதோ வேலைக்கு செல்லும் சில சராசரிகளின் நிலைமையைவிட மோசம் என்று சொல்ல முடியாது ஆனாலும் அப்படித்தான் இருந்தது குமாரின் நிலைமை.தான் இவ்வாறு இருப்பதற்க்கு முழு காரணம் தன் தந்தைதான் என்று திடமாக நம்பினான்.சிறு வயதிலிருந்தே தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை செய்யவிடாமல் அவருடைய கனவுகளை தன்மீது  திணித்து, அதையும் செய்யமுடியாமல் அடைந்த தோல்விக்கும் தன்னையே பொறுப்பாக்கி, தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலும் சகமனிதர்களிடத்தில் ஏற்படும் அவமானமுமாக சேர்ந்து மனதின் எங்கோ ஆழத்திலிருந்து எப்படியோ எப்போதாவது மட்டும் வெளிப்படும் அச்சம் அச்சமயம் முதல் அதுவே அவனாக ஆனதும், பின் அதுவே பழகிப்போய் எந்த ஒரு சின்ன செயலுமே செய்வதற்க்கு பயந்து தயங்கி அந்த பலவீனத்தை மறைக்க தன்னை ஒரு சோம்பேறியாக வெளிக்காட்டிக் கொண்டு கோழை என்பதைவிட சோம்பேறி என்று சொல்வது பரவாயில்லை என்ற மனநிறைவோடு இருக்க உதவிய பெருமையும் தன் தந்தையையே சேரும் என்று முழுமையாக நம்பினான்.

பின்னாட்களில் சில அடிப்படை தவறுகள் தெரிந்தே செய்வதற்க்கும் தனக்கு நியாமான காரணங்கள் இருப்பதாக நினைத்து சமாதானமடைய வேண்டியிருந்தது. தவறென்று தெரிந்தபின்பும் அதில் மனம் ஒன்றிப்போக இதுமாதிரி கற்பிதம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.முதன்முதலில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அப்படித்தான் ஏற்பட்டது.எப்படியோ புகையை இழுத்து அதனுடைய போதையை அனுபவித்த பிறகு இது கேடு என்றும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் ஏற்பட்ட தோல்விகளும் அவமானங்களும் அதற்க்கு முழுபொறுப்பாளராக நினைத்த தந்தையையும் நினைக்கையில் உலகத்தில் தான் மட்டும் எல்லா சமயங்களிலும் எல்லாராலும் கைவிடப்பட்டுவிட்டதாக ஏற்பட்ட எண்ணம் தீராத தனிமை உலகம் ஒன்றில் தள்ளியது.தான் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதால் இந்த சின்ன சிகரெட் போதையை அனுபவிக்க தனக்கு எல்லா உரிமையும் உண்டு என்று நினைக்க வைத்தது அது.

இது எவ்வளவு அபாண்டமானதொரு பொய் என்றும் பின் அறிய நேர்ந்தது என்றாலும் வயது முதிர்ச்சிக்கேற்ப அதை தத்துவார்த்தமாக பரிசீலித்து எதிர்கொண்டு சமாதானமடைய கற்றுக்கொண்டான்.

இதையெல்லாம்விட அவன் தந்தைமேல் தீராத வன்மம் கொள்ள வைத்தது, தன்னுடைய காதல் விஷயத்தில் ஏற்பட்ட கசப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவரே காரணம் என்றும் நினைத்ததுதான்.காதலைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கல்லூரியில் சைட் அடித்து சுற்றித் திரியும்போது எப்படி நடந்தது என்று தெரியாமலேயே இருவருமே காதல் வயப்பட்டு உலகத்தையும் கூடவே தன்னையுமே மறந்த நாட்கள், தன் பலவீனத்தை மறக்கடிக்க செய்த நாட்கள், ஆனாலும் ஒரே பெண்ணை அளவில்லாமல் காதலிக்க  முடியாது என்பதாலோ இல்லை அப்படியும் காதலித்தால்  காதலை தவிர்த்து மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க நேரிடும் என்பதாலோ அவனுள் இருந்த அந்த பல்வீனமானவன் இப்போதும் எதிரிமறையாக சிந்தித்ததின் விளைவு அந்த காதலும் முடிவு பெறாமல் போனது.காதல் முறிந்த சில நாட்கள் அதன் வலியும் பின்னே 'அட கிடைச்ச சமயத்துல அவள அனுபவிக்க தவறிட்டோமே' என்று வாய்ப்பை தவறவிட்ட ஏமாற்றமும் தான் மிச்சமானது. பயங்கரம் என்னவென்றால் அதற்க்கும் தன் தந்தைதான் காரணம் என்று நம்பினான். அவனுள் இருந்த பலவீனமானவன் காதல் விஷயத்திலும் தலைத்தூக்கியதுதான் காதல் முறிவுக்கும் காரணமாக இருந்தது.அந்த பலவீனமானவனை உருவாக்கியது தன் தந்தைதானே என்று நம்பினான்.

எப்படியோ ஒருவாறு பட்டம் பெற்றாகிவிட்டாலும் வேலை தேடும் பயங்கரம் பயமுறுத்தியது. தோல்வியை ஒப்புக்கொண்டு மேற்படிப்புக்கு செல்வதென்றாகி கொஞ்ச நாள் தப்பித்து அந்த காலக்கெடுவும் முடிந்து இப்போது இப்படி இவ்வாறு இருக்கும் நிலைமைக்கு வந்திருந்தான். ஒன்று அந்த பலவீனமானவனை ஒழிக்க வேண்டும் இல்லை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அதற்க்கான போராட்டத்தில் சில நேரம் தோல்வியடைய நேரும்போது அவன் தந்தை இப்படியாக அவனுள் மிதித்து நசுக்கப் படுவார்.

'இவன்லாம் எதுக்குயா கல்யாணம் பண்ணி கொழந்த பெத்துக்குறான்,இப்டி சமூகத்துல ஒன்னுமில்லாம ஆக்கவா, இவனுக்குலாம் கல்யாணம் செஞ்சி வச்சான் பாரு அவன சொல்லனும், ஓத்தா வளர்க்க தெரியலனா எங்கயாவது தெருலயாவது விட்டிருக்கலாம்,சாதாரன மனுஷனுக்கு கிடைக்கிற சந்தோசத்தையாவது அனுபவிச்சிட்டு போயிருப்பேன்' ஆனால் அதுவொன்ன்றும் அவ்வளவு எளிதில்லை என்றும் உள்ளூர அறிந்திருந்தான்.

அப்படியொன்றும் மோசம் இல்லை. குமாரின் அடிப்படைத் தேவைகளை என்றுமே நிறைவேற்றித்தான் வந்திருக்கிறார்.அதை புரிந்து கொள்ளாமலில்லை. அப்பாக்கள் என்றுமே மகன்களை புரிந்துகொள்வதில்லை. மாறாக எல்லா மகன்களும் அப்பாக்களை புரிந்துகொள்ளும் தருணம் ஒன்று நிச்சயமாக ஏற்படுகிறது.

அருகில் இருந்த கடையொன்றில் சிகரெட் வாங்கி பற்றவைத்து இழுத்தான். எப்போதாவதுதான், இது மாதிரி நியாமான காரணங்கள் அமையும்போது.புகைப்பிடித்து விட்டு மிஞ்சிய துண்டை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.இதுவும் கொஞ்ச நாளாகத்தான் மூளை வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும்போது மற்ற உருப்புகள் தங்களது அன்றாட கடமையை தானாகவே செய்ததின் விளைவு இது.பின் தொடைச் சதையில் சூட்டை உணர்ந்து அதை வெளியே எடுத்துப் போட்டான்.

இதெல்லாமே தான் நினைத்திருந்தால் மாற்றியிருந்திருக்கலாம் என்றும் சில சமயங்களில் தோண்றும்,ஆனால் தன் இயலாமையை மறைக்க எதன்மீதாவது முழுபழியையும் ஏற்றி வைப்பது அடைந்ததும் அடையப்போவதுமான தோல்விகளுக்கும் முன்கூட்டியே ஆறுதலாக அமையும் என்பதால் இது சாலச் சிறந்த வழியாக நினைத்தான். அதற்க்கான வேலைகளில் மனமும் மூளையும் விரைவாக இயங்கும்.நடந்து முடிந்த சம்பவங்களை அடுக்கடுக்காக நினைத்துப் பார்த்து காரண கர்த்தாவான தன் தந்தையையும் நினைத்து தவறு நம்முடையதல்ல என்று மனம் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும்.

புலம்புவதும் பிடித்துதான் போயிருந்தது ,மனதை பாதித்த சம்பவங்களை நினைத்துப் பார்த்து புதிப்பித்துக் கொள்வது தற்போதுள்ள வலிக்கு ஆறுதலாக இருந்தது.அப்படி ஒன்றும் நினைத்து மந்தஹாசம் புரியும் சம்பவங்களில்லைதான், தான் இவ்வாறு இப்படி இருப்பதற்க்கு அவை விளக்கம் அளிப்பதால் அடைந்த பொய்யான ஆறுதல்.

நடந்த களைப்பில் பசி அதிகமானது.

வீட்டுக்கு போனால் அவருடைய முகத்தை பார்க்க வேண்டியிருக்கும், நிச்சயமாக காயப்படுத்தும் என்ற எண்ணத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளை உள்வாங்கி அதிர்ச்சியாகி தளர்ந்த அப்பாவின் முகம் ஞாபகம் வந்தது. தமிழ் சினிமா ஒன்றில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வருவதை தடுக்கமுடியவில்லை.நாயகனின் இதே மாதிரி புண்படுத்தும் வார்த்தையால் தந்தை கதாபாத்திரம் நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்க்காரும்.பின் ஒரு நாள் தந்தையை நினைத்து கட்டிலில் போய் படுத்து கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு அழுகிற காட்சி.சினிமாவின் தாக்கம் இவ்வளவு தூரம் இருக்கும் என்று நினைக்கத்தான் இல்லை.அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தான்,அது மாதிரி அழுதால் நன்றாகத்தானிருக்கும்.எதற்க்கு?எதற்க்கோ.

வீட்டுக்கு திரும்பி நடந்தான்.

அம்மாதான் கதவை திறந்தது. 'ஏம்பா அப்டி சொன்ன,சாப்ட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்குனு படுக்கப் போய்ட்டாரு' இப்படி ஒரு வசனத்தை அம்மாவிடம் எதிர்பார்த்தான்.இல்லையென்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக்த்தான் இருந்தது.காட்டிக்கொள்ளவில்லை.

'ஏன்டா சீக்கிரம் வந்து திண்ணுட்டு ஆள விட வேண்டியதுதான ஏன் இப்டி தூக்கத்த கெடுக்குற' அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

எதையும் பேசாமல் உள்ளே நுழைந்து அப்பா தூங்கிவிட்டிருந்த அறையை தாண்டிப் போய் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்து எட்டிப்பார்த்தான்.அப்பாவின் குறட்டை ஒலி அதிர்ந்தது,தொப்பை வெகுவாக ஏறி ஏறி இறங்கியது.நன்றாக தூங்கிவிட்டிருந்தார்.மனதை தேற்றிக்கொண்டு பெருமூச்சொன்று விட்டான்.

சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டான். இன்றைக்கு எப்படியாவது அழ வேண்டும். சுலபமான காரியம் போல் தெரியவில்லை.

அந்த சினிமா காட்சியை நினைவுப் படுத்திக் கொண்டான்.அப்பாவின் தளர்ந்த முகம் மீண்டும் வந்து  நெஞ்சை கணக்குமாறு செய்ய வேண்டியிருந்தது. அப்பானு இத்தனை நாள் நினைக்கலனா எப்படி எந்த உரிமையில் அவரோட காசுல வாழ்ந்துகிட்டு இருக்கோம், இதெல்லாம் எல்லா அப்பாக்களும் செய்ய வேண்டிய கடமைதானே என்று உள்ளூர இருந்த அசைக்கமுடியாத எண்ணம்தானே. கைவிடப்பட்டு தனிமையாகிவிட்டோம் என்ற எண்ணம் இருந்தாலும் கயிற்றின் அறாத பிரிபோல சிறு நம்பிக்கைத் தழல் உள்ளே கனன்று கொண்டிருப்பது அவர் இருக்கிறார் என்ற உள்ளுணர்வுதானே. பின்னே யார் செய்த பிழை இது.வில்லன் நானேதானோ.எளிதில் ஒப்புக்கொள்ள முடியாதுதான், இன்று அழுதாக வேண்டுமாதலால் இதுவும் உதவலாம் ஆனால் இது மட்டும் போதாது.

அப்பாவிடம் தான் கூறிய வார்த்தைகளின் கடுமையை நினைத்தான். அதனாலா இல்லை எங்கோ மனதின் அடி ஆழத்திலிருந்து எல்லாம் தன்னுடைய தவறாகுமோ என்று எழுந்த குற்ற உணர்வாலா இல்லை தன்னிரக்கத்தாலா இல்லை சினிமாவில் அந்த நாயகன் அழும் காட்சியை நினைத்துப் பார்த்ததாலா எதுவென்று தெரியாமல் வாயை கையால் பொத்திக்கொண்டு உடைந்து அழத் தொடங்கினான். 

Saturday, 22 February 2014

சிறுகதைகள் #2: சராசரிகளும் ஒரு உரையாடலும்

உண்மையை சொல்லனும்னா அதை ஜீரணிக்கவே முடியல அதுவும் அதை அவன் வாயாலே சொல்லிக் கேட்டதுமே உள்ளே குமைய ஆரம்பித்து விட்டது, இனி இது தணிய எத்தனை நாள் ஆகுமோ? அது எப்டி இவனுக்கு, அதுவும் MBBS படிச்ச பொன்னு,காலக் கொடுமைடா, எவ்வளவு சாதாரணமா சொல்றான், அட இவன் அந்த பொன்னுக்கு தகுதியான ஆளா இருந்தாக் கூட பரவாயில்லயே, மனசு அமைதியாகிடும்,இவனுக்கு எப்டி, அதுவும் ஆறு வருஷ காதலாமே, இப்படியெல்லாமா கூட நடக்கும்.உள்ளுக்குள் இவ்வளவு புகைச்சலை கிளப்பிவிட்டு எந்த சலனமுமின்றி வாங்கிக் கொடுத்த சரக்கை ரசித்து ருசித்து குடித்துக் கொண்டிருந்தான் குமார்.சின்ன வயசு  நண்பன். ஐந்தாம் வகுப்பு வரை ஒன்னா படிச்சோம்.அதற்க்குப் பின் கூட சிறிது காலம் தொடர்பில் இருந்தோம்.


அன்னைக்கி ஞாயிற்றுக்கிழமைன்றதால நமக்கும் வேறு வேலை இல்லை இதற்க்கு முன் கூட இருந்ததில்லைதான்,நண்பனும் அவவாறேனு பார்க்கும் போதே தெரிந்தது அப்பவே மிதமான மப்புல இருந்தாப்டி.


எப்டி சொல்றதுனு தெரியல அப்போ என் கூட பள்ளி முடித்து கடைசி வரை சென்று வேலையில் உள்ளது சிலர்தான்.மற்ற அனைவருக்குமே பிடி இல்லை. அவர்களுக்கான ஏதோ ஒரு தருணத்தில் வழி தவறி போயிட்டாங்கனு தான் சொல்லனும்.அதுவும் குமார் நிறையவும் கெட்டுப் போயிருந்தான்.


கொஞ்ச நேரம் பழசுகளை சிலாகிச்சி பேசிட்டிருந்தோம். மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்த்து அது தொடர்புடையவர்களோடு  பகிர்ந்து கொள்வது நன்றாகத்தானிருக்கும், ஆனா சந்தோஷம்ன்றது அரிதாகிப் போன நாட்களில்,நனவில் நிறைவேறாத சில ஆசைகள் எப்பயாவது அபூர்வமாக கனவில் நடப்பது போலக் காண நேர்ந்து பின் திடீர்னு விழிப்பு வந்து அடையும் ஏமாற்றம் மாதிரி நெஞ்சடைக்கும் இதுவும்,முடிந்து போன விஷயம் என்ற பிரக்க்ஞை திரும்பும்போது.


அன்னைக்குதான் அந்த ஜீரணிக்கவே முடியாத விஷயத்தை சொன்னான்.


'ரொம்ப நாள் கழிச்சி பார்க்குறோம்,ட்ரீட் உண்டா மச்சி'-குமார்


இல்லைனும் சொல்ல முடியாது, பேன்ட் பாக்கெட்ல பர்ஸ் பொடப்பா இருக்கறத பார்த்திருப்பான்.ஒரு காலத்துல ரொம்ப க்ளோஸ்,அந்த் நினைப்பு இப்பவும்கூட இருவருக்குமே மங்காமல் இருந்ததால்,பக்கத்து டாஸ்மாக்கில வாங்கி வாட்டர் மிக்ஸ் செய்து அங்கேயே ஊத்திக்கிட்டான்.இடையில் மொபைலில் யாரோ அழைக்க சற்று தள்ளிப் போய் பேசிவிட்டு வந்தான்.


திரும்பி வந்து 'நம்ம லவ்வர்  மச்சி' நான் கேட்க்காமலே அவனே சொல்ல ஆரம்பித்து,MBBS முடிச்சிருக்கறதாகவும்,+2 முதலே லவ்வுனும் சற்று சுருக்கமாக ஒரு கொசுவத்தி சுருள் ஓட்டி முடித்தான்.


ஆள் பார்க்கறதுக்கு குடியும் சிகரெட்டுமாக இருந்தாலும் பொதுவாக காதலிக்கிற ஆண்களின் பாவனைகள் குமாரிடமும் இருந்தாலும் கூட 'இவனுக்குலாம் எப்டி செட்டாகும்' என்ற தவறான தீர்க்க தரிசனம் இருந்து வந்ததும் மேலும் அப்டி ஒன்னும் பய பெர்ஸ்னாலிட்டிலாம் இல்லை என்பதாலும் ஒரு சமயத்தில் அதையும் கேட்க்காமல் இருக்க முடியவில்லை,


'எப்டி மச்சி இந்த விபரீதம் நடந்தது,நீ வேற சும்மா வெட்டியா இருக்க,அப்டியே இருந்தாலும் அந்த பொன்னு வீட்ல ஒத்துப்பாங்களா?'


'அதுலாம் ஒன்னும் மேட்டர் இல்ல,ஏற்கனவே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணியாச்சு'ஆர்வத்துடன் அவனோட மொபைல் கேமராவில் ஜோடியாக எடுத்த அந்த பொன்னோட புகைப்படத்தைக் காட்டி'இவதான்டா மச்சி, உங்கிட்ட காட்டாம யாருகிட்ட காட்டப்போறேன்'.கேட்ட கேள்வி சுருக்குனு பட்டிருக்கும் போல 'எப்டி பொன்னு,மடக்கிட்டேன் பாத்தியா' என்பது போல தோரணை இருந்தது.


'ம்ம் வாழ்த்துகள் மச்சி'


கல்யாணம் பண்ணிக்கிறதா வேணாமானு குழம்பி ஒரு வழியா சரி பாருங்கனு வீட்ல ஒப்புதல் கொடுத்து பெண் பார்க்கும் படலம் தொடங்கி காட்டும் அத்தனைப் பெண்களின் புகைப்படங்களை விட பன்மடங்கு நன்றாகத் தானிருந்தது. 'காலக் கொடும, இவனுக்கா இப்டி'.


புகைச்சல் என்றும் சொல்ல முடியாது ஆனால் அதிர்ச்சி அடையாமலும் இருக்க முடியாது.சில கசப்பான உண்மைகள் தெரிய வரும்போது ஏற்படும் அதிர்ச்சி.இவனோட காதல் எவ்வளவுதூரம் போகும்ன்றது ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு பெண் வீட்டுக்கு தெரியாம ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிற அளவு போறதும்,அந்த அளவு இவனை நம்பறதும்,அப்படி இவன்கிட்ட என்ன இருந்தது,என்ன கண்டுகிட்டா இவங்கிட்ட.


ஒரு பெண்ணால காதலிக்கப் படுறது எல்லா ஆமபளைக்குமே அது அவன் பிறந்ததுக்கான முதலான அர்த்தம்ன்ற உண்மையோ பொய்யோ,அதுவரை பெற்று வந்த அகஉலக அறிவு அதுமாதிரி தெளிவில்லாமல் உணர்த்தி இருந்ததாலும் நண்பனுக்கு அது இயல்பாக ஈடேறிவிட்டதாலும் அதனால் உண்டான கருகல் என் புற உலக அறிவின்மையைத்தான் தெள்ளத் தெளிவாக காட்டியது.


உண்மையில் இதை எப்படி புரிந்து கொள்ளனும்னு தெரியல.இல்ல இதுல புரியமுடியாத அளவுக்கு எதுவும் இல்லாமலும் இருக்கலாம்.ஆனா ஒன்னுமே இல்லைனு கண்டிப்பாக போக முடியாது என்றுதான் தோன்றுகிறது.


அதுவும் மருத்துவச்சி,தாங்கிக் கொள்ள முடியாதுதான். வெட்டிப்பய,குடி, சிகரெட்,ஹான்ஸ் எல்லாம் பழக்கமும் இருக்கு அவனுக்கு எப்டி இந்த பொன்னு?சிரிப்பாகவும் இருந்தது.அடப்பாவி அவன் உன்னோட நண்பன்டா, இப்டியா வயிறி எரிஞ்சி புலம்புவ.அதுதான் பிரச்சணை அவனும் என்னப் போலத்தான நா சுமார் மூஞ்சினா அவன் ரொம்ப சுமார் மூஞ்சி,மயக்குற அளவுக்கு ஆணழகன் கூட இல்லையே.இந்த சூட்சமம்லாம் புரிஞ்சிருந்தா நாமளும் பல ரவுன்ட் வந்திருக்கலாமோ அல்லது அது மாதிரி சூட்சமம்லாம் எதுவுமே அதில் இல்லையோ என்னவோ?


நமக்கும் தானே நடந்தது அது,கலைவாணி கூட நம்மகிட்ட நெருங்கிதானே வர முயற்சி செஞ்சா.நாமதான் அது ஏதோ பெரிய தப்புனு விலகி போயிட்டோம்.அப்போ இருந்த புரிதல அப்படி.ஆனாலும் ஆசை விடலயே நானும்தானே சைட் அடிச்சேன்.என்ன செய்யறது.ரெண்டு வருஷம் அப்டியே பார்த்துகிட்டே இருந்தோம்,அவளும் என்னென்னமோ செஞ்சா,நமக்கு தான் அது என்னனு புரியவே இல்ல,மக்கு,கடைசில 'போடா பொட்டை'னு சொல்லிட்டு போயிட்டா.எதுக்கு அப்படி சொன்னா நாம என்ன செய்யாம இருந்தோம்,பார்த்து சிரிச்சேன்,சிரிச்சேன்,வெறிக்க வெறிக்க பார்த்தேன், எங்க்கிட்ட முன்னாடி வந்து வேணும்னே குனியும்போது வச்ச கண் விலகாமலே பார்த்தேன் வேற என்ன செய்யனும்.


அவ என்ன நினைக்கிறானு எனக்கு எப்படி தெரியும்.சொன்னாத்தானே தெரியும்.ஆமா நானாவது சொல்லிருக்கலாம்.நான் எப்டி சொல்லுவேன் நான்தான் அது சரியா தவறானு புரிஞ்சிக்க முயற்சி செய்தே காலம் போயிடுச்சி.அட அவளாவது சொல்லிருக்கலாம் 'உன் கூட ஒரு நாள் படுக்கனும்'னு, சொல்லிருந்தா எப்படியாவது முடிச்சிருப்பேன்.ஆனா அந்த பொன்னு என்ன நினைச்சிருக்குமோ ஒரு வேளை என்னிடம் வேற எதாவது பரிவு,கணிவு இல்லை நவரச பாவணைகள் எதாவது எதிர்பார்த்திருக்குமோ என்னவோ? எப்டியோ அதை புரிந்து கொள்வதற்க்குள் கைமீறிப் போயிடுச்சி.


காதல்னு வேறு சொல்லுறான்.எப்படி காதல் வந்தது அந்த பொன்னுக்கு இவன பார்த்து.ஐய்யோ மண்டையே வெடிக்கிற போல இருக்கு.நானும் தான் காதலிச்சேன்.ஆனா எப்டி அந்த ஈர்ப்பு வந்தது.சொல்லவே அசிங்கமாத்தான் இருக்கு.அப்பவே எப்படி நாட்டுக்கட்டை மாதிரி இருந்தா அவ.அதை பார்த்துதான சொக்கிட்டேன்.எப்படியோ காதல் வந்து தொலைஞ்சிடுச்சி. அதைக் கூட க்ரிமினல் கேஸ் ஒன்னுல போஸ்ட் மார்டம் ரிப்போர்டுக்காக மாட்டிகிற பொனத்த அறுக்குற மாதிரி அந்தக் காதலை அறுத்துக் குழப்பி, புதைத்துப் பின் எழுப்பி ஒருவழியா அது காதல்தான்னு தெளியுற சமயத்துல எல்லாம் போச்சு.


வேற!!!!நினைத்து பார்த்தா நிறையவேதான் இருக்கு இதுபோல சம்பவங்கள்.குமார் அது மாதிரி ஒரு சம்பவத்த புரிந்துகொண்டு இல்லை அதில் அவ்வாறு சிந்தையை கசக்கி பிழியும் அளவில் ஒன்றுமே இல்லையென்ற மனோபாவம் இயற்கையாகவே இருந்ததால் அந்தப் பெண் அவனை விரும்பியிருப்பாளோ?


உலகத்தை சுத்தி வந்து ஞானப்பழத்தை பெறமுடியாது போன முருகனுக்கு என்ன மாதிரி வெறுத்துப் போயிருப்பாரோ அப்படித்தான் இருந்தது.அவனுக்கு மட்டும் அந்தப் பழம் கிடைத்தது எப்டி,அங்கிள் வயசு ஆகிப்போன சமயத்துல இந்த மாதிரி ஏமாந்து போனதாக வரும் எண்ணம் நல்லதுக்கில்லைதான்.அப்டி ஒன்னும் வயசு ஆகிடல பார்க்கலாம்.


பார்க்கவே ரவுடி மாதிரி இருக்கான்,நல்லா ஜாலியா வாழ்க்கையை கடத்துறான்.இதுலாம் தப்புனு ஒதுங்கி வீட்ல சொல்லிக்கொடுத்ததை அறம்னு நம்பி வளர்ந்து ஏமாந்து  புலம்பல் தான் மிச்சம்.நானாவது தேவலாம்,அந்த கேஸ் கம்பெனி ஓனர் பையன் ஒருத்தன் இருக்கானே,ஐயோ உலகமே தெரியாம இல்ல வளர்ந்திருக்கான் முப்பது வருஷமா,அம்பி மாதிரி, நாமளாவது இப்ப யோசிக்கிறோம், அவனுக்கு,சொன்னாலும் ஏதோ 'அபிஸ்டு,அபச்சாரம்'னு சொல்லிட்டு போவான்.அதுவும் நல்லதுதான் ஒருவகையில்.


இது நன்மை இது தவறுனு முன்கூட்டியே பழுக காய்ச்சி அடித்து அடித்து இறுக வைத்து விட்ட சூழ்நிலை நம்மளோடது.அப்டியே இருந்துட்டா பரவாயில்ல, உண்மைனு எதையோ இந்த மாதிரி தெரிஞ்சிக்கும்போதுதான் கடைசில என்ன இழந்தோம்ன்றது தெரிய வருது.தெரிஞ்சும் ஒன்னும் பலனில்லை,செக்கு மாட வெளிய அவுத்துவிட்டா சுத்தி சுத்திதான் வரும்.


குமாருக்கு இந்த கட்டுப்பாடு எதுவும் இல்லாமல் இருக்கலாம்,அதனால பிள்ளையார் கணக்கா ஞானப்பழத்தை எடுத்துகிட்டான்.


*****


சரக்கு முழுவதையும் குடித்துவிட்டும் நிதானமாகத்தான் இருந்தான் குமார்.


பாக்கெட்ல இருந்த சிகரெட் ஒன்ன எடுத்த பற்றவைத்து இழுத்தான்.


'நிறைய கெட்டுபோயிருக்க போல'அந்த கணத்தில் நினைத்து கொஞ்சம் பெருமையாகத்தான் இருந்தது,ஹான்ஸ்,சரக்கு பழகவில்லை என்பதான அற்ப காரணங்களால்.


'எப்டி ரவுடி மாதிரி தெரியுதா'


'கிட்டத்தட்ட'


'இல்ல மச்சி நிறைய பிரச்சணை'


'உனக்கு என்னடா பிரச்சணை,ஜாலியா இருக்க'


'உனக்கு தெரியாதுடா,வேல ஒன்னு வாங்கி தர்றேன்னு சொல்லி ஒருத்தன் ரெண்டு லட்சம் ஏமாத்திட்டான்,வீட்ல வேணாம்னு தான் சொன்னாங்க நாந்தான் சண்டை போட்டு கடன் வாங்கி...இந்தப் பிரச்சணை போதாதுனு போன மாசம் போதைல தெருல  மூஞ்சிய பேத்துட்டேன்,எப்படான்னு இருக்கானுங்க, 'கவலை தொணிக்கும் தோரணையில் பேசியது கொஞ்சம் வியப்பாகத்தான் இருந்தது.


நீ ஒன்னும் இதுக்குலாம் கலங்குற ஆளில்லயே மச்சி' செஞ்சதுக்கு வருந்தி பின்னாடி நினைத்து பார்க்காத எதுவும் தவறு இல்லைதான்.


'இல்ல மச்சி,வீட்டு பக்கம் போயே ரொம்ப நாளாச்சி,வீட்லயும் உள்ள விட மாட்றாங்க,+2 பாஸ் பண்ணவே நாலு வருஷம் ஆயிடுச்சி,அப்றம் இன்ஜினியரிங் சேர்ந்து, அதுக்குள்ள நா பார்த்த சின்ன பசங்கெல்லாம் வேலைக்கு வந்துட்டானுங்க, அப்போ எதுவும் தெரியல, படிக்கலனாக்கூட எதாவது தொழில் செஞ்சிட்டு இருந்திருப்பேன, எவன் மூஞ்சிலயும் முழிக்க முடியல' போதையேறிய கண்களோடு தன் வலிகளை சொல்லி, சிகரெட் புகையை வெளியே ஊதி,அவனுள்ளும் நானறிய வாய்ப்பில்லாத அல்லது புரிந்து கொள்ள முயற்சி செய்யாத துக்கத்தையும் சற்று ஊதி இலைபாற நினைத்தவன் போல மேலும் தொடர்ந்தான்.


'வீட்லயும் முன்ன மாதிரி இல்ல,எத்தனி நாளைக்குதான் அவங்களும் பொறுத்து போவாங்க, இந்த கஷ்டத்த மறக்க சரக்கு, அடிக்கலனா துக்கமே வரமாட்டேங்குது,ஒன்னு தெரியுமா? நா வீட்டுக்கு போய் ஒரு மாசம் ஆகுது, அக்கா வீட்ல காசு வாங்கி திண்ணுட்டு, குடிச்சிட்டு திரியுறேன்,எவனாவது மாட்டுவான்,நாள் ஃபுல்லா சரக்குதான்,போதை இறங்கனதுமே என்னோட நிலைமைய நினைச்சி பார்த்தா நெஞ்ச அடைக்குது,எப்படி உயிரோட இருக்குறேன்னே தெரியல மச்சி,நரக வேதனையா இருக்கு,இதுல வேற அந்த பொன்னு,என்ன செய்யுறதுனே தெரியல,நானே என்னோட லைஃப கெடுத்துகிட்டேன்னு தான் நினைக்கிறேன்' அவனோட வேதனைகளை சொல்லி என்னோட அர்த்தமே இல்லாத புலம்பல்களை இன்னும் அர்த்தமில்லாததாக்கினான். .


'அந்த பொன்னுக்கு இதுலாம் தெரியுமா டா'


'வேலை தேடிட்டு இருக்கேன்னு சொல்லி வச்சிருக்கேன்'


கொடும கொடுமனு இங்க வந்தா இங்க ஒன்னு தலைய விரிச்சி போட்டுக்கிட்டு டிங்கு டிங்குனு ஆடிச்சாம் அந்த மாதிரித்தான் இருக்கு.


'ம்ம் அவனவனுக்கு ஆயிரம் பிரச்சணை'


'சரி விடு அது என்னோட கஷடம்,அப்றம் உனக்கு கல்யாணம் எப்போ? முடிச்சிட வேண்டியதுதான'


'கல்யாணம் போயிட்டிருக்கு மச்சி,பாக்கலாம்'


'ஒன்னும் யோசிக்காத ,வீட்ல பார்க்குற பொன்ன பண்ணாத்தான் நல்லது,எந்த பிரச்சணையும் இல்ல,பின்னாடி எதாவது கஷட்ம்னாலும் கூட நிப்பாங்க' அவனடைந்த வாழ்க்கைப் பற்றிய புரிதல் அறிவுறையாக வந்தது.


'ஆனா நீ பரவால்ல மச்சி, ஞாபகம் இருக்கா அப்போ சின்ன வயசுல வீட்டுக்கு வருவ,பட்டை போட்டுக்கிட்டு,பொட்டு வச்சிக்கிட்டு,எங்க அம்மா உன்ன சொல்லித்தான் எனக்கு அட்வைஸ் பண்ணுவாங்க,அப்போ இதை உங்கிட்ட சொன்னது இல்ல,சொல்ல முடியல பொறாமையாவும் இருக்கும்,இப்பக் கூட உன்ன வீட்ல கேட்பாங்க,நானும் உன்ன மாதிரி அப்பலாம் செஞ்சி பார்த்திருகேன்,சாமி கும்பிடுவேன்,காலைல எழுந்து புத்தகத்தை எடுத்து வச்சிக்கிட்டு படிக்கலாம்னு ட்ரை பண்ணிருக்கேன் ஆனா என்னோட ஆர்வமெல்லாம் வேறயா இருந்துச்சி அதனால முழுசா செய்யமுடியல'எதோ ஒப்புதல் வாக்குமூலமாக சொல்லி முடித்தான்.


இவன் என்னடா இப்டி புலம்புறான்.அதையெல்லாம் நினைச்சி வெட்க்கபட்ட நாளெல்லாம் இருக்கு.


இவன மாதிரியே நம்மளால சொல்ல முடியுமா,"எப்டி மச்சி அந்த பொன்ன உஷார் பண்ண,சூப்பர்டா எங்கயோ மச்சம் இருக்கு மச்சி உனக்கு, நானும் ரெண்டு மூனு ட்ரை பண்ணேன் எல்லாம் மேட்டர் மச்சி,இப்ப சைட் அடிச்சா மொறைக்க பாக்குறாளுக டா,எல்லாம் காலம் கடந்து போச்சு"இப்டி சொல்ல முடிஞ்சா அது அவனோட புலம்பலுக்கு என்னோட சோடியா இருக்குமா தெரியாது.சொல்லலாம் தான்.ஊரு ஒத்துக்காது.


குமாரோட சூழ்நிலை வேறு கட்டுப்பாடு அதிகம் இல்லாத ஒன்று,காட்டு மிருகம் போல,நம்மளோடது மிருகக் காட்சி சாலை,ரெண்டு மிருகத்துக்கும் போராட்டம் இருக்கும்,காட்டுல அதோட இயற்கையான குணங்களோட ஒவ்வொரு வேளை உணவுக்கும் போராட வேண்டியிருக்கும்,கம்பிக்குள்ள இருக்குற மிருகத்துக்கு அந்த போராட்டம் இல்ல,ஆனா தன்னோட இணையை கண்ணுல காட்டாம ஊசி போட்டு கர்ப்பம் தெரிக்க வைக்கிற கொடுமை உண்டு,இந்த உண்மை எதுவும் தெரியாதிருந்து,சட்டம் வகுத்து வாழும் மனித சமூகத்தில் குமாரை வைத்து பார்க்கும்போது நம்மளோட புலம்பல்கள் ஒன்னுமே இல்லைதான்.


இல்லை இப்படியாகவும் இருக்கலாம்,அவரவரின் புரிதலில் தனக்குத்தானே போட்டுக் கொள்ளும் வட்டம் அதில் அமையும் சூழ்நிலைகள் பொறுத்து. சோதனைகள் இருவருக்குமே இருக்கும்தான்.துக்கமோ சந்தோஷமோ அதன் வடிவம்தான் வேறாக இருக்கும்,வீரியம் என்னமோ ஒன்னுதான்.


என்னவோ இன்னமும் புதிராகத்தான் இருக்கு.


'சரி மச்சி நீ என்கூட வீட்டுக்கு வா,உன் கூட வந்தா வீட்ல விடுவாங்க,வீட்ல உன்ன பார்த்தா ரொம்ப சந்தோசப் படுவாங்க' போதை அதிகமாகி நிலைகொள்ளாமல் தள்ளாடினான் குமார்.


'வேணாம் இன்னொரு நாளைக்கி வரேன்,நீ வேற தள்ளாட்ற,வண்டில ஏறு வீட்டு முனைல விட்டுடறேன்'


'மச்சி நீ எதும் சாப்பிடலயேடா,வா பெப்சி குடி,இருபது ரூபா இருந்தா தா' எங்கிட்டயே காசு வாங்கி கடையில் பெப்சி வாங்கினான்.பாதி குடித்துவிட்டு கொடுத்தேன்.அதையும் வாங்கிக் கொண்டான்.


'இன்னிக்கி ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா,பார்க்கலாம் மச்சி' கண்கள் சொருகி குரல் தடுமாறியது குமாருக்கு.


'பார்க்கலாம் மச்சி' அவன் சொன்னதை ஆமோதித்து திரும்ப சொல்ல தோணவில்லை,எனக்கே சந்தேகமாகத்தான் இருந்தது,தெளியவாவது செய்ததா என்றால் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 


Monday, 3 February 2014

சிறுகதைகள் #1: காளையும் பின்னே ஒரு பரிணாம வளர்ச்சியும்




வெயிலில் வெந்து தகித்துப்போன தார் சாலை பின்னிரவின் இலேசான குளிரில் இலைப்பாறிக் கொண்டிருந்தது.கிடைத்ததை தின்று அரை குறை வயிற்றுடன் நகரின் பிரதான சாலையோரம் உள்ள அரசமரத்தடியில் உட்கார்ந்து அசைபோட்டுக்கொண்டிருந்தது கொம்பன் காளை. அப்படியொன்றும் விருந்து இல்லை,இருந்த இடத்திலே சகலமும் தேடி வந்த காலம் கனவுபோல் ஆகிவிட்டது, அது ஒரு காலம், ஒரு வேளை வயிறு நிறையவே  இப்போது நாள் முழுவதும் தெருக்களில் சுற்ற வேண்டி யிருக்கிறது, குடியிருப்பு பகுதிகள் என்றால் பாலித்தீன் பைகளில் சுருட்டி போட்ட காய்கறி மிச்சங்கள், அல்லது உணவு எச்சங்கள்,தாகத்திற்க்கு கழிவு நீர்தான்,மார்கெட்டில் பொழுது போன நேரம் பார்த்து கிடைத்த அழுகின முட்டைக்கோஸ்,தக்காளி,கீரை வகைகள், அதுவும் இல்லாத சமயம் சாலைகளில் நடந்தால் புதுப்பட சினிமா அல்லது பிறந்த நாள் காணும் அரசியல் தலைவர்களின் சுவரொட்டிகள் , சில நேரங்களில் இவை கூட கிடைப்பது கடினம்தான்,ருசியாக எள்ளு, கடலை, பருத்திப் பிண்ணாக்கு, பார்த்து நாட்கள் மாடுகளின் காலக் கணக்குப்படி இருபது வருடங்கள் ஆகியிருக்கும்.

சரி அப்படியே மெதுவாக உலாத்திவிட்டு வரலாம்.கூட துணையும் இல்லை,தான் ஒட்டிக்கொண்டிருந்த கூட்டத்திலிருந்து பிரிந்து வந்து  சில நாட்கள்தான் ஆகிறது. சுற்றும் பார்த்துவிட்டு மெதுவாக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தது. பின்னங்காள் ஒன்றில் உடைத்துப்போட்ட கண்ணாடி சில்லு கால் குளம்பில் ஏறி  இழுத்துக்கொண்டு நடந்தது காளை. நன்றாக நினைவிருக்கிறது,பார வண்டி இழுத்த நாட்கள், அப்போதெல்லாம் தினமும் மூண்று வேளை தவிடு, வடி கஞ்சி, ஞாயிறு நாட்களில் பிண்ணாக்கு. அவ்வ போது காளையேறுதல் கூட, அதுதான் கொம்பன் கடைசியாக மகிழ்ச்சியுடன் இருந்த நாட்கள், உரிமையாளர் ரிக்ஸா ஒன்று வாங்கி விட்டதால் வளர்த்த பாசம் காரணமாக கறிக்கு அனுப்பாமல் அவிழ்த்து விட்டுவிட்டார். சில நாட்கள் அங்கேயே சுற்றி வந்துவிட்டு  பின் அங்கிருந்து விரட்டி அடிக்கப்பட்ட போது செல்ல இடம் தெரியாமல் சுற்றி திரிந்து ஒரு கூட்டத்தில் சேர்ந்து, அலைந்து ஒன்றாக புசித்து சில பல நாட்டு ரக பசுக்களுக்கு பேருந்து நிலையத்திலோ அல்லது காய்கறி சந்தையிலோ பிள்ளை வரம் கொடுத்து ஓடியது சில நாட்கள்.

கடைகள் அடங்க ஆரம்பித்திருந்தன, சுற்றி வந்தது காளை. நாய் ஒன்று 'வள்'ளென்று குரைத்தது, மிரண்டு அப்பக்கம் ஒடியது. தண்ணீர் இருந்தால் தேவலாம், தாகமாக இருந்தது, குடிப்பதற்க்கு தண்ணீர் கிடைப்பதோ மனித உருவத்தில் இருந்தால் தான் சாத்தியம் போல் தெரிகிறது.ஆழ்துளை கிணறுகள் வெட்டவோ இல்லை அக்வாகார்ட் உபயோகிக்கவோ தோதாக உடல் அமைப்பு இல்லாததை நினைத்து வருத்தமாக இருந்தது. சிரமம்தான் மிருகமாய் இருப்பது அதுவும் மனிதனிடம் வளர்ந்துவிட்டு பின் விரட்டி யடிக்கப்பட்டு இப்படி உணவுக்காக திரிவதென்றால், கொடுமையாகத்தான் உணர்ந்தது. தார் சாலை நேற்றுதான் புதிதாக போட்டது போல,வாகனங்கள் சென்று தெறித்த சிறு சிறு கற்கள் கண்ணாடி சில்லு ஏறிய காலை பதம் பார்த்தது.வலியுடன் முனகியது.

பசி,வலி போன்ற இயற்க்கையின் உந்துதல்களை அந்தந்த உடலுறுப்புகள் கூட தாங்கிக்கொள்ளக்கூடும் அது ஏற்படுத்தும் உளவியல் சார்ந்த பிரச்சனைகளை சமாளிக்க கடினமாகத்தான் இருந்தது.சில வருடங்களாகத்தான் இப்படி. தானும் மற்றக் காளைகளை போல எந்தப் பிரக்ஞையும் இல்லாமல் இருந்திருந்தால் இந்த நிலைமை வந்திராது.தன் நிலைமையை நினைத்து நொந்து குட்டிச்சுவர் ஒன்றில் முட்டிக்கொண்டது.தனக்கு மட்டும் ஏன் இப்படி நடந்தது,இத்தனை நாட்கள் தன் இனங்கள் காணாத பரிணாம வளர்ச்சி தனக்கு 
மட்டும் எப்படி சாத்தியமானது.அந்த போதி மரத்தடியில் தன்னைப்போல எல்லா மாடுகளும்தான் ஓய்வெடிக்கின்றது தனக்கு மட்டும் ஏன் இப்படி. ஒன்றும் புரியவில்லை.ஆம்!!!

மாடுகளின் நாட்காட்டியில் சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு..

ஊரின் ஒதுக்குப்புறத்தில் இடுகாட்டின் ஓரம் அமைந்த ஒரு அரச மரத்தடியில் காளை தன் கூட்டத்துடன் உட்க்கார்ந்து மந்தகாசமாக அசைபோட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென்று ஒரு உதறல் தலையை சிலுப்பிக்கொண்டு எழுந்தபோது உடல் ரோமமெல்லாம் குத்திட்டு நின்றது.குளிராக இருக்கும் என்று நினைத்துக் கொண்டது, எழுந்து சோம்பல் முறித்தது.கெட்ட கனவொன்று கண்டது போல் இருந்தது.சுற்றிலும் வேறு பசுக்களோ காளைகளோ இல்லை,தான் மட்டும் எப்படி இவ்வளவு நேரம் இங்கு,அந்த இடமே அமானுஷ்யமாக இருந்தது.அருகே சிதிலமடைந்த நிலையில் ஒரு கோயில் பார்க்க கோயில் மாதிரியும்  இல்லை, ஆனால் பழங்கால கட்டிடம்,அருகே அம்மணமாக ஆண் சிலைகள் தலை இல்லாமலோ அல்லது கைகள் இல்லாமலோ,யாராலையோ இடிக்கப்பட்டது போல் தோன்றியது. அதில் ஒரு சிலை தவமிருக்கும் நிலையில் தன்னையே பார்ப்பதுபோல் இருக்கவே  கொம்பன் தலையை  வேறுபக்கம் திருப்பிக் கொண்டது.அப்போது ஒன்றும் உறைக்கவில்லை, அடுத்த நாளும் அதே இடத்திற்க்கு சென்றது.ஏனோ மீண்டும் மீண்டும் அங்கு செல்ல வேண்டும் போல் இருந்தது.

பல ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்தில் புத்த விகாரம் இருந்ததாகவும் பின் வந்த மன்னர்களால் அது இடிக்கப்பட்டதாகவுமான ஒரு வரலாற்றை சொல்லித் தெரிய வேண்டியதில்லை.ஆதலால் சந்தேகமே வேண்டாம் கொம்பன் பார்த்தது சிதிலமடைந்த புத்த விகாரம்தான்,அந்த மரமும் போதி மரமாக இருக்கலாம் ஆராய அவசியமில்லை.விஷயம் இதுதான்,கொம்பன் காளைக்கு போதி கிடைத்துவிட்டது.இவ்வளவு சுலபமாகவா என்றால் ஆம்தான் இல்லை என்றால் இல்லை.

இப்படியாக ஒரு வாரம் செல்லவே காளையின் நடவடிக்கைகளில் நிறைய மாற்றம் இருந்ததை சக மாடுகள் கண்டு கொள்ள ஆர்ம்பித்தன.உணவு தேடியலைந்தது போக மற்ற நேரங்களில் சிதிலமடைந்த கோயிலின் முன் உட்க்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்வதும், (மாடுகள் கால்கள் பிண்ணி அமர்ந்து தியானம் செய்வது சாத்தியமில்லையென்றாலும் கொம்பன் தன் பின்னங்காள்களை தரையில் மடித்து உட்க்கார்ந்தும் முன்னங்கால்களை முகத்துக்கு நேரே நீட்டிக்கொண்டும் தியானம் செய்தது ஒன்றும் வியப்பில்லை, இதை கற்பனை செய்து பார்ப்பதற்க்கு வாசகர்கள் தடுமாறலாம் ஆனாலும் வேறு வழியில்லை இக்கதையின் கரு அப்படி).

சில நாள் நடுநிசியில் திடீரென தலை சிலுப்பி சன்னதம் கொண்டு ஆடுவதும்,எதாவது கேட்டால் மோன நிலையில் வாயோரம் புத்தரை போல மெலிதாக ஒரு புன்னகை புரிவதுமாக,காளை புன்னகை புரிகிறதென்றால் நம்ப முடியாமல்தான் உள்ளது ஆம் அது அப்படித்தான்.சக காளைகள் கொம்பனின் அருகில் வரவே தயங்கின.நாட்கள் உருண்டோட  மற்ற காளைகள் போல் கொம்பனால் இருக்கமுடியவில்லை, தனக்குள்ளேயே முனுமுனுத்துக் கொண்டு திரிந்தது.கேட்டால் மந்தகாசமாக ஒரு புன்னகை.

அதன் பிறகு எப்போதும் கூட்டத்தை விட்டு தனித்து செல்லவே விரும்பியது கொம்பன்.உணவு தேடும் நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஏதோ சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தது,பசி எடுக்கிற சமயம் மட்டும் ஏன் எதுவும் சிந்திக்க தோன்றவில்லை என்றும் சிந்தித்து பார்த்தது,ஒன்றும் மட்டுப்படவில்லை.

ஒரு சமயத்தில் இது மாதிரி கோளாறான சிந்தனைகள் அலுப்பை உண்டாக்கியது,காரணம் இயற்க்கையின் உந்துதல்கள்,காளையேறி பல நாட்கள் ஆகிறது மறுபடியும் தன் கூட்டத்திலே சேரலாம்,மனிதனின் சுபாவங்கள் சிலவற்றை காளை தன் கூட்டத்திடம் பிரயோகித்து பார்க்கலாம் என்று நினைத்தது.

ஒரு நாள் நிசியில் சன்னதம் கொண்டு எழுந்து ஆடி சக மாடுகளை கூட்டி தனக்கு போதம் வந்துவிட்டதாகவும்.நான் சாதாரன காளை மாடு இல்லையென்றும் நான் உங்களின் மீட்பர் என்றும் அதை தன் கனவில் இறக்கையுடன் கூடிய இரண்டு கெடாரிகள் வந்து சொன்னதாகவும்,கூறவே முதலில் யாரும் நம்பவில்லை. சில இளங்க்காளைகள் சிரித்துக் கொண்டன. சில கன்றுகளும் அதன் தாய் பசுக்கள் மட்டும் பயத்துடன் கேட்டுக் கொண்டிருந்தன.

இருந்தாலும் காற்று கொம்பனுக்கு சாதகமாகவே வீசியது.

பின்னாளில் கொம்பன்  தன்னை  நம்பும் சில காளைகளையும் சில ஜெர்சி ரக பசுக்களையும் கூட்டி கோயிலின் அருகில் இருக்கும் அரசமரத்தடியில் பிரசங்கம் உபாசனைகளும் நடந்தேற்றியது.  நாளைடவில் பக்கத்து ஊர் நாட்டு பசுக்களுக்கும்  செய்தி பரவி கொம்பனை கேட்க்க வரும் கூட்டம் அதிகமாகிக் கொண்டே இருந்தது.மரத்தடியில் வெட்டவெளி ஆசிரமம் ஏற்படுத்தும் அளவிற்க்கு பிரசித்தி பெற்றது. கொம்பனான்டி என்றால் தெரியாத மாடுகளே கிடையாது சுற்று வட்டாரத்தில்.காளைகள் சிஷ்ய கோடிகளாக சேர்ந்து பணிவிடை செய்தன.இரவு நேரங்களில் சில உயர்ரக சிந்திப் பசுக்களை அழைத்து வந்து பஜனை நடந்ததாக வந்த செய்தி  கொஞ்சம் மிகையாக இருக்கலாம். செக்ஸ் ஆராய்ச்சி என்று சொல்லி சமாளிப்புகள் நடந்தன. எதிர்ப்புகளும் எழாமலில்லை.

சிறிது நாட்கள் இப்படியாக ஓடியது,ஆனாலும் உண்மையை  அறைகுறையாக  அறிந்தவன் உறங்கியதில்லை, கொம்பனுக்கு இந்த வாழ்க்கை முறையும் சலித்துதான் போனது, தான் தேடிப் புல் மேய்ந்து தினம் பல காளையேறி வெயிலேறி தகிக்கும் தார் சாலைகளில் சாணி போட்டு  உழன்று மடியும் இனமில்லை என்ற எண்ணம் சிந்தையை உலுக்கிக் கொண்டே இருந்தது.ஒரு நாள் தான் வடதிசை நோக்கி நான்கு கால்நடையாக பிரயாணம் போகப் போறதாகவும் தன்னுடன் வருபவர்கள் வரலாமென்று கூறவே சிஷ்ய மாடுகள் மறுக்க ஆசிரம பணிகளை அதுகளிடம்  ஒப்படைத்துவிட்டு கிளம்பியது.

வடதிசை பிரயாணங்களின் போது சில நாட்கள் பெருநகரங்களில் சுற்றியது. அங்கு உயிரினங்கள் வாழ தோதான சூழ்நிலைகள் இல்லையென்று அறிந்துகொண்டது.கண்ணுக்கு எட்டின தூரம் வரை புல்பூண்டையே காணும்,மனித இனம் மட்டும் எப்படி பிழைக்கிறது என்பது ஆச்சர்யமாகதான் இருந்தது,பின் மிகவும் பிரயத்தனம் செய்து அந்த உண்மையை தெரிந்து கொண்டது.அதை யாரிடமும் சொல்வதாக இல்லை.

வட திசை பயணத்தின் ஒரு நாளில் டெக்கான் பீடபூமியில் மார்கழி இரவுக் குளிரில் மனம் அலைபாயவே எழுந்து நான்கு கால் போனபோக்கில் நடந்தது. தூரத்தில் மூன்று இளங்காளைகள் ஒன்றை ஒன்று முட்டி விளையாடிக் கொண்டிருந்தன, அருகில் மங்கிய வெளிச்சத்தில் ஒரு பசு நிற்பது தெரிந்தது. வெட்டவெளி ஆசிரமத்தில் நாளைக்கு ஐந்து என்று ஏறிய காலமெல்லாம் இல்லை, போராடுவது சிரமம், பேசி மயக்கி வேண்டுமானால் பார்க்கலாம் மனித காளைகள் போல. "இது வேலக்கி ஆகாது" இருந்தாலும் முயற்சி செய்து பார்த்தது,சமாளிக்க முடியவில்லை,சிறு காயங்களுடன் தப்பித்து ஓரமாக வந்து நின்றது,ஒன்றும் பலனில்லை.பார்த்து ரசிக்க மட்டுமே முடிந்தது.

சிரித்துக்கொண்டே தோற்றுப்போன காளைகளோடு சேர்ந்து திரும்பி நடந்தது.மனிதனின் குணங்கள் தனக்கும் தொற்றிக் கொண்டதை நினைத்து வெட்கிய நேரம் முகத்தில் சுளீரென்று வெளிச்சம் அடித்தது. அதிலிருந்து இரண்டு மனித உருவங்கள் கரிய நிழல் போல தன் முன்னால் நெருங்கி வருவது தெரிந்தது.நெருங்க நெருங்க ஏதோ ஆபத்து வருகிறது என்று மட்டும் சூதாரித்து ஒரு முடிவுக்கு வந்த நேரம் கொம்பனும் மற்ற காளைகளும் ஒரு டெம்போ வேனில் ஏற்றப்பட்டு பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தன.பின் கொம்பன் ஒற்றைக் காளையாக குடோனில் அடைப்பட்டிருந்த தன் சக மாடுகளையெல்லாம் காப்பாற்றி வெளியே வந்ததெல்லாம் வேறு கதை.
                                                                                                   
அது நடந்த ஆகிறது பல காலம்.இந்த இருபத்தைந்து வருடங்களில் எங்கும் சுற்றி இறுதியில் ஆரம்பித்த இடத்திற்க்கே வந்து சேரத்தான் முடிந்தது.பழைய நினைவுகள் வருவதும் போவதுமாக இருந்தது. பின்னிரவு நேரம்,சாலைகளில் மனித நடமாட்டம் மங்கியிருந்தது,அப்போதும் கூட மனிதன் பிற உயிர்களை நடமாட விடுவது கிடையாது,சுளீரென்று முதுகில் அடி விழுந்தது காளைக்கு, பழக்கடையை மூடிக்கொண்டிருந்த கடைக்காரன் கத்தினான், துள்ளிக் கொண்டு சாலையின் அப்பக்கம் ஓடியது.எதை வைத்து அடித்தான் என்று தெரியவில்லை,அடித்த இடம் எரிந்தது.சாலையின் ஓரமாக சென்று பின்னங்கால்களை மட்டும் மடக்கி உட்க்கார்ந்து மூத்திரம் கால்களில் தெளிக்காமல் பெய்தது.எரிச்சலாக இருந்தது.ஹஸ்த பாதாங்குதாசனம் கற்றுக்கொண்டது வசதியாக போயிற்று. நிறைய தெரிந்துகொண்டுதான் இருந்தது இத்தனை வருடங்களில். பயணங்கள் என்றுமே அலுத்துபோனதில்லை இந்த காளைக்கு.

தன் இருபத்தைந்தாண்டு பயணங்களில் மனிதர்களின் நடவடிக்கைகள் ஆச்சர்யமூட்டுவதாகவே இருந்தது.மனித இனம் தன் இனத்தை விருத்தி செயவதை ஒரு தொழிலாகவே செய்வதை அறிந்து திகைத்தது.பசுவை ஏமாற்றி பால் கறக்கும் விதத்தையும் மேலும் பசுவை சிணை பிடிக்க வைக்க வெள்ளைக் கோட் போட்ட ஒரு மனிதன் ஊசி போன்று கையில் வைத்திருக்கும் தன் ஆண் குறியை பயன்படுத்துகிறானென்றும் அந்த குறியை எளிதாக தேவைப்படும் போது உபயோகித்து கொள்ளவும் குளிர்பெட்டியில் வைக்கவும் செய்கிறான் என்பதையும் அறிந்து மிரண்டு போனது.அதிகம் தெரிந்து கொள்வதும் ஆபத்தானதுதான்.

எல்லாம் தெளிவு பெற்றும் ஒரு குறை இருந்தது.அதுதான் மொழி ஆளுமை. பின் அது ஒன்றும் பெரிதாக தெரியவில்லை.சாட்சாத் சரஸ்வதி தேவியை நோக்கி பத்து திங்கள் ஒரு மலையடிவாரத்தில் தவம் இருக்கவே அந்த வரமும் கிடைத்துப் போனது. பின் சில பல மனித மொழிகளை  படிக்கவும் கற்றுக்கொண்டது. ஆய்வுக் கட்டுரைகள் எழுதும் அளவிற்க்கு இல்லை யென்றாலும் ஓரளவிற்க்கு புலமை பெற்றிருந்தது. அஃறினைகளுக்கு இது எப்படி சாத்தியம் என்று கேட்க வாசகர்கள் முயல வேண்டாம்,கதை ஒரு வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது, விட்டு விடுங்கள்,அவ்வபோது குப்பையில் கிடைக்கும் நாளிதழ்கள், வார இதழ்கள் மூலம் மனித இனத்தின் நாட்டு நடப்பு செய்திகளை தெரிந்து கொண்டது. பின் ஹிந்தி, அங்கிலம் போன்ற மொழிகளும் எழுதப் படிக்க கற்றுக்கொண்டது. முதலில் ஹிந்தி கற்க நேரும்போது மனதுக்குள் ஹிந்தி எதிர்ப்பு துளிர்விட்டது.வேறு வழியில்லை தன்னைப் போன்ற நாடோடிகளுக்கு மொழி பேதம் ஏது, ஹிந்தி எதிர்ப்பை வெளிப்படுத்தி  அடையப்போவது ஒன்றுமில்லை.

உயிரியல் தத்துவங்களுக்கும் குறையில்லை.குப்பையில் கிடந்த பள்ளி மாணவனின் விடைத்தாளிலிருந்து டார்வின் கொள்கையையும் மனித உடலின் அனாட்டமியையும் அறைகுறையாக தெரிந்து கொண்டது.பரிணாம வளர்ச்சியின் பயனாக உயிரினங்களின் தலை,கை,கால்கள் ஆகியவற்றை தேவைக்கேற்ப நீட்டி,முழக்கி வடிவமைத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து தன் கால்களை வளைத்து நெளித்து பார்த்தது. பின்னங்கால்களில் பாதி எழுந்து நின்று விட்டை போட்டுவிட்டு முன்னங்கால்களை பின்னால் வளைத்து தண்ணீர் ஊற்றி அலம்ப முயற்சி செய்து பார்த்து பின் இது அதீத கற்பனை என்பதையும் உணர்ந்து மனதுக்குள் சிரித்துக் கொண்டது.அந்த முயற்ச்சியை கைவிடாமல் தோதாக சில யோகாசன முறைகளையும் பழகிப் பார்த்தது.

நாட்கள் செல்ல செல்ல மெதுவாக புரியத் துவங்கியது தான் பரிணாம வளர்ச்சியின் ஆரம்பத்தில் இருக்கிறோம் என்று.தான் ஒரு காளை என்றும் அது மனித இனம் தங்களுக்கு பொதுவாக சூட்டிய பெயர் என்றும் தெரிந்து கொண்டது.

அவ்வபோது சில அரசியல் கட்சி கூட்டங்களையும் தொண்டர்கள் பின் ஒரு ஓரமாக உட்க்கார்ந்து கேட்க்க வாய்ப்பிருந்தது,எல்லாம் செய்தாலும் வயிற்றுப் போராட்டம் பெரும்பாடாகவே இருந்தது.சில நேரங்களில் உடல் பசிக்கு துணை தேடுவதும் அறிதாகவே நடந்தது.காலையேறி வருடம் இருக்கும், தியானம்,யோகாசன பயிற்சி  காரணமாக அதை துறந்தாகிவிட்டது, சில முறை கட்டுப்படுத்த முடியவில்லை. இது மாதிரி நேரங்களில் மனித இனம் தன் கைகளை பயன்படுத்திக்கொள்ளும் என்பதை ஒரு பருவ இதழில் கொம்பன் படித்திருந்தது.தனக்கு அந்த வசதி இல்லையென்று நினைக்கும் போது தாங்கொனா துயரில் ஆழ்ந்தது.

எத்தனை படிப்பிணைகள்,தன் வாழ்வு மற்ற காளைகள் போலல்லாமல் இனிதே முற்று பெற்றுவிட்டதாக உணர நேர்ந்தாலும் அநேக நேரம் நிம்மதி இழந்து தவித்தது. அது தூங்கிப்போன சிந்தையை எழுப்பிக் கொண்டே இருந்தது.

குடலில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்ந்த உலோகத் துகள்கள் வயிற்றில் ஏற்படுத்திய அரவம் காளையின் குடலை அரித்துக்கொண்டே இருந்தது இன்னும் எத்தனை நாட்கள் என்று தெரியவில்லை.தான் சிந்தித்தவற்றை எப்படி அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக போகிறோம் என்று நினைக்கையில் துயரம் உணவுக் கவளம் வைத்திருந்த தொண்டையை அடைத்தது.துயரத்தை அடக்கி கவளத்தை மறுபடியும் வாயில் கொண்டு சென்று அசைப்போட்டது.

எவ்வளவு நேரம் சாலையோரங்களில் குப்பைகளை மேய்ந்தாலும் பசி மட்டும் அடங்காதுபோல.எழுந்து மறுபடியும் நடந்தது.சுவற்றில் புதுப்பட போஸ்டர் ஒட்டியிருந்தது. அதில் இருந்த மனிதனின் உருவத்தை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தது, அந்த போஸ்டரை அப்படியே விட்டுவிட்டு பக்கத்தில் "பருவ ராகம்" என்ற படப் போஸ்டர் ஒட்டியிருந்தது.அதை கிழித்து திண்று பசியை தீர்த்துக்கொண்டது. பசி அடங்கவில்லை, திரும்பி நடப்பது வீண்,காலையில் பார்த்துக் கொள்ளலாம்.சாதாரன காளையாக இருந்து கிடைத்ததையாவது அனுபவித் திருக்கலாம் என்ற எண்ணமும் வந்து போகாமல் இல்லை.முதலில் இந்த பாரத்தை இறக்கி வைத்தால் தேவலாம் போல் இருந்தது. மிதமாக வீசும் குளிர் காற்று என்னவோ செய்தது.சினிமா சுவரொட்டியை பார்த்ததிலிருந்து மனம் அலைபாய்ந்து கொண்டிருந்தது.

ஊருக்கு வெளியில் சென்று பச்சையாக ஏதும் மேய்ந்து பார்க்கலாம் என்றாலும் போகப்போக நீண்டுகொண்டே செல்கிறது நகரத்தின் ஆக்கிரமிப்பு , அதற்க்கு பேசாமல் இங்கேயே கடைத் தெருவில் மீந்து போனது எதாவது கிடைக்கும். வாயிலும் கண்களிலும் நீர் ஒழுக அலைந்தது.தனக்கு இவ்வளவு ஞானம் கிடைத்தாலும் அதை வைத்துக்கொண்டு நாள் முழுக்க சிந்தனை செயவது தவிர வேறொன்றும் செய்வதற்க்கில்லை என்பதை நினைத்து மனம் வேதனை அடைந்தது. தூக்கம் வராமல் உலாத்தியதில் களைத்துப் போயிருந்தது.சுற்றும் முற்றும் பார்த்து உட்க்கார்ந்து மீண்டும் பழைய நினைவுகளை அசைப்போடத் துவங்கியது. 
                                                  
                                                        ----தொடரும்----

Related Posts