ஒரு பருந்தின் நிழல்
உங்களுக்கு
ஓர் அழகான
வெளிக் கோட்டு ஓவியம்..
ஆனால் அதைப் பற்றி
கோழியிடம்
நீங்கள் கேட்டு விடாதீர்கள்..
ஒரு பூனைக்கு
நீங்கள் தரும்
அன்பு முத்தம்
எலிகளுக்கு யுத்தப் பிரகடனம்.
நீங்கள் கையில் எடுக்கும்
பூச்சிக் கொல்லிகளைப் பற்றியும்
வண்ணத்துப்பூச்சிகளைப் பற்றியும்
நாம் பேச வேண்டாம்..
(அவைகளின்ஆன்மா சாந்தியடைவதாக..)
குருவிகளின்
ட்ரிட் ட்ரிடடுகள்
உங்களுக்கு
இரட்டை இரட்டை
ஒலிக் கோவைகள்..
ஆனால்
மற்றொரு குருவிக்கு
அது
வாழ்நாள் செய்தி..
நீங்கள் குடியிருக்கும்
வீட்டுக்கு சொந்தக்காரர்
ஆறுமாதம் தேங்கிப்போன
உங்கள்
வாடகைப் பணத்தைக்
கேட்க வருகிறார்..
உங்கள் வாழ்வின்
துயர்களை அவரிடம்
சொல்ல விழைகிறீர்கள்..
அவர்
எதையும் கேட்காமல்
உங்களுக்கான கெடுவை
நிர்ணயித்துப் போகிறார்..
இந்த
சுழன்று பழசாகிப் போன
உலகில்
என்றென்றும்
நீங்கள் பேச வரும் சொல்
அர்த்தமற்றதுதான்..
இவ்வுலகம்
அமைதியுற
எனது பிரார்த்தனைகள்..
No comments:
Post a Comment