எப்படியாவது
இந்த புன்னகையை
தக்கவைத்துக் கொள்ள முயல்கிறேன்
சத்தியமாக எனது
இல்லாதவைகளை உன்னிடம் நான்
திணிக்கவில்லை
நீ அன்று உணர்ச்சிவயப்பட்டு
குத்தினாயே
அந்த
கத்தி மீதோ உன்மீதோ
எனக்கு எந்த புகார்களுமில்லை
நாம் வேடிக்கை பார்க்கும் ஆற்றில்
நாம் துப்பிய எச்சில்
எத்தனை விநாடிகளில்
காணாமல் போகிறது என்பதற்கு
எப்போதும் உன்னிடம்
நான் பந்தயம் கட்டியதில்லை
முடியவில்லை எனினும்
எப்போதும் தனியாகவே நடக்கிறேன்
முத்தத்தைத் தவிர உன்னிடம்
எதுவுமே ஏற்றதில்லை
உன் கால் கடிக்காத
செருப்பைப் போல அல்லாது
உன் கக்கத்தில் அறுக்காத
புதிய ஜாக்கெட்டைப் போலும் அல்லாது
நீ உள்ளே நுழைகையில்
ஏற்கெனவே எரியும்
விளக்கை போலதான்
இருக்க விரும்பினேன்
நன்று
நடக்கட்டும்
என்னை நீர்ப்பதைக் காட்டிலும்
உன்னைக் கட்டமைப்பதே
உனக்கு மிக நல்லது
பவதி பிக்ஷாம் தேஹி என்பதற்கும்
த்தா.. சோறு போட்றீ
என்பதற்கும் வேறுபாடு உண்டா என்ன..
No comments:
Post a Comment