Wednesday, 1 July 2015

அனுபவங்கள் : தொடு அலைப்பேசி [smartphone] அவசியமா?


எங்கு திரும்பினாலும் ஸ்மார்ட் போன் மயம்தான் ! காலை புலர்வதே gmail, whatsapp, facebook மற்றும் twitter'இல் தான் !  

ஸ்மார்ட் போன்கள் அதிகமாக புழக்கத்தில் வர ஆரம்பித்தது 2011'இல் தான். இதை இன்றைய வடிவில்  அறிமுகம் செய்து கொள்ளை இலாபம் பார்த்தது சாம்சுங் நிறுவனம். இன்று ஊறுகாய் குழுமங்கள் எல்லாம் ஸ்மார்ட் போன் தயாரித்து விற்க ஆரம்பித்துவிட்டன.  எத்தனை கம்பெனிகள் ஸ்மார்ட் போன் தயார் செய்கின்றன என்று பரீட்சை வைக்க கூடிய அளவுக்கு வித விதமான ஸ்மார்ட் போன்கள் உள்ளன. இவற்றில் பெரிய கேள்வி - உண்மையில் இவை அவசியமா?

10 வருடங்களுக்கு முன் வண்ண அலைப்பேசி என்றால் அது நோக்கியா 6030 தான்  - வெறும் பிங்க் நிற திரையை வண்ண அலைப்பேசி என்று விற்ற காலம் அது ! அப்போதெல்லாம் நோக்கியா calculator அளவில் அலைபேசியை விற்கும் ! இவற்றை PDA என்றழைப்பர் !
எனக்கு நினைவு தெரிந்த  வரை முதல் ஸ்மார்ட் போன் இந்தியாவில் நோக்கியா 6600 தான் ! இன்று வரும் அளவுகளில் பார்த்தால் கூடிய விரைவில் மடிக்கணிணிகள் அளவில் வந்தாலும் ஆச்சர்யம் இல்லை ! மேலும் அப்பொழுது இது போன்ற அலைப்பேசிகள் தொழில் முறை நிமித்தமாக பணி செய்பவர்கள்தான் அதிகமாக உபயோகித்தார்கள். இன்றோ 7'ஆம் வகுப்பு மாணவன் ஐ -போன்'ஐ விமர்சனம் செய்கிறான். எங்கள் குடும்பத்தில் ஒரு இரண்டு வயது நிரம்பாத குழந்தை 'செல்பி' கேட்டு அடம் பிடிக்கிறது. கால ஓட்டத்தில் இவ்வகை அலைப்பேசி இல்லாதவரை ஏளனமாக பார்க்கும் அவலம் வந்து விட்டது ! 

90% பேருக்கு இன்று இவ்வகை அலைப்பேசி தேவையே இல்லை ! பெரும்பாலும் அவர்கள் உபயோகம் whatsapp, facebook  இந்த அளவில்தான். தொழில் முறையாளர்களுக்கு, அதுவும் சுயதொழில் செய்பவர்களுக்கு மட்டுமே, இவற்றின் உபயோகம் உண்டு; அதுவும் உடனுக்குடன் வரும் email களுக்கு பதில் அளிக்க மற்றும் தொழில் அபிவிருத்திக்கு மட்டுமே இவற்றின் பயன் உண்டு. மற்றபடி பெரும்பாலனவர்கள் வெட்டி பந்தாவுக்கும், வீண் பேச்சிருக்கும் தன் இவற்றை வைத்திருக்கிறார்கள் .இவற்றின் வரவால் நன்மைகள் இருப்பினும் தீமைகளே அதிகமாகி விட்டது ! எந்த ஒரு கண்டுபிடிப்பும் நன்மை கருதியே செய்யப்பட்டு பின்னர் தீமை அதிகமாகி விடும் தன்மையை அடைகிறது .  மேலும் இன்று புத்தகம் வாசிக்கும் பழக்கம் குறைந்து விட்டது ! e-books கிடைத்தாலும் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்கும் சுகமே தனி ! படிக்கும் பழக்கம் குறைந்து விட்டதால் எழுதும் திறன் மற்றும் ஒரு விஷயத்திற்கு பதில் தேடும் திறனும் குறைந்து விட்டது.  மேலும் ஆங்கில வார்த்தைகளான you, have, are இன்று ஒற்றை எழுத்துகளாகி விட்டன.  ஒரு விதத்தில் தமிழ் பிழைத்தது - இல்லா விட்டால்  ஒரு வார்த்தை கால் வார்த்தையாக மாறி இருக்க கூடும் !

என் அலைப்பேசி தொலைந்து போனதும் அழைப்புகள் இல்லாமல் சற்று நிம்மதியாக இருந்தாலும், என் தொழில் விஷயமாக, இன்றைய உடனடி சேவை நெருக்கடி உலகில் என்னை நிலை நிறுத்திக்கொள்ள,  இவ்வகை அலைப்பேசியை மீண்டும் வாங்க நேரிட்டது ! சாதாரண அலைப்பேசி வைத்திருந்த காலத்தில் அத்தனை எண்களும்  மனப்பாடமாக இருந்தன; இப்போதோ என் எண்ணையே சமயத்தில் யோசிக்க வேண்டி இருக்கிறது.  சில நேரங்களில் இதற்கு முழு நேரமும் அடிமையாய் இருக்கும் சிலரை பார்க்கும்போது வாழ்க்கையில் personal touch' ஐ இழந்து விடுவரோ என்று யோசிக்க வைக்கிறது ! என் வீட்டில் செல்பி எடுக்க வேண்டும் என்பதற்காகவே  இ வ்வகை அலைப்பேசியை வாங்கினார்கள் ! 

எந்த ஒரு பொருள் வாங்கும் முன் இது அவசியமா என்று யோசித்தால் பல பொருட்கள் தேவையே இல்லை.  ஒரு பொருளின் தேவை அறிந்து வாங்குவது பொருளாதாரத்தின் அடிப்படை.  தேவை ஏற்படும் வரை அவற்றை தள்ளி போடுவது நம் மீது நாமே கொண்டிருக்கும் ஒரு நல்ல கட்டுப்பாடு.  எந்த ஒரு விஷயத்தையும் அனுபவிக்க வேண்டும்; ஆனால் அடிமை ஆக கூடாது ! ஆனால் நாம் (நான் உள்பட) இவற்றிற்கு அடிமை ஆகி விட்டோமோ என்று  எண்ண தோன்றுகிறது.  

இப்பொழுது நீங்களே உங்களை கேட்டுகொள்ளுங்கள் - தொடு அலைப்பேசி அவசியமா இல்லையா என்று !


No comments:

Related Posts