போரூரில் சில வருடங்களாக இருக்கிறேன் ஆனால் இந்த பகுதியின் பெயர் அறியாமலே இருந்திருக்கிறேன். ஸ்டேண்டு ஆட்டோ காரர்களிடம் காவல் நிலையம் பின்னாடி என்றே விபரம் கொடுத்து வந்திருக்கிறேன் அவர்களும் என்னிடம் உரிய பெயரே கூறியதில்லை. சரியாக இடத்தின் குறிப்பு சொல்ல வேண்டும் என்றால், அது கிண்டியில் இருந்து ராமச்சந்திரா மருத்துவமனை செல்ல போரூர் சந்திப்பில் இருக்கும் டிராபிக் சிக்னலுக்கு முந்தைய சிக்னலில் வலப்புறம் திரும்ப ஆற்காடு ரோடுடன் இணையும் ரோட்டை கொண்டது அப்பகுதி. ரோட்டின் இருபுறமும் நகர் போன்று பெரியதொரு குடியிருப்பு பகுதி கொண்டது. சிக்னலுக்கு அருகில் தான் போரூர் காவல் நிலையம் அது அந்த ரோட்டின் ஒரு முனை. மறுமுனை ஆற்காடு ரோட்டை அடையும் பகுதி. முதலே குறிப்பிட்ட முனையில் பெரிய பெரிய வீடுகள் அமையப்பெற்று இருக்கும். வேறொரு முனையில் சிறு சிறு வீடுகளாக அமையப்பெற்று இருக்கும். சிறு சிறு வீடுகள் போருரின் கடந்த காலத்தை நினைவுப்படுத்துவது. வேறொரு முனை தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் சின்னங்கள்.
சிறு வீடுகளில் ஏதேனும் நடக்கும் சுப துக்க நிகழ்வுகளுக்கு கட்டிய பேனர்கள் எனது ஊரை ஞாபகப்படுத்தும் . ஒரு பரபரப்பான சூழலில் அந்த ரோட்டில் வந்துகொண்டிருந்தேன், பைக்கில் தான். சூரியன் சுட்டெரிக்கிறதே என்னும் கடுப்பிலும் இயற்கையான முறையில் குளிரூட்டப்படுத்துதல் பற்றியும் சில நடவடிக்கைகள் ஏற்கனவே மேற்கொண்டிருந்தேன். அதில் ஒன்று ஏசியை சாராது வாழ்தல் என்பது. அந்த ரோட்டில் ஒரு கடை தட்டுப்பட்டது. பானையை அடுக்கி வைத்து விற்பனைக்கு என்று பலகை போடப்பாட்டிருந்தது. அது சரி பிரிட்ஜ் ஐ சாராது குளிர் நீரை குடிக்க வேண்டும் என்றும் தோன்றியது. கடையில் பானை வாங்கி பைக்கில் 180 டிகிரிசுழன்று திரும்பியபோது பாழடைந்த சுவற்றில் எழுத்துகள் தட்டுப்பட்டன. கண்ணில் கண்டவைகளை படிக்கும் குணம் உண்டென்பதால் படிக்க நேரிட்டது. "குயப்பேட்டை, போரூர்" என்று எழுதி இருந்தது.
அக்கம் பக்கத்தில் ஒரு வயதான பெரியவர் ஒருவரிடம் விசாரித்தபோது பல்லவர்கள் போர் புரிவதற்காக நகருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக அமைந்த ஊரே போரூர் எனப்பட்டது என்றும் இங்கு களி மண், மண் பாண்டங்கள் என பல மணல் சார்ந்த பொருட்களை குலத்தொழிலாக க்கொண்ட குயவர்கள் வாணிபம் செய்த ஊர் என்றும் அறியப்பெற்றேன். இப்போது இந்த ஒரு கடைதான் மிஞ்சி இருக்கிறது என்றும் கூறினார் அந்த பெரியவர்.
கண்முன்னே இருக்கும் எவ்வளவோ விஷயங்களை கண்மூடித்தனமாக கடந்திருக்கிறோம்? காலம் சில எச்சங்களை விட்டு வைத்திருக்கிறது, கவனித்துக்கொள்வோம்.
No comments:
Post a Comment