Monday, 6 April 2015

நிகழ்வு: வா.மணிகண்டன் படைப்புகள்: விமர்சனம் & கலந்துரையாடல்


மகேஷ் என்பவரைப்பற்றிய விளக்கு எனும் பதிவை நிசப்தத்தில் படித்தபோதுதான் எனது அலுவலகத்தில் ஆன்றாய்ட் தொழில்நுட்பத்தில் வேலை தேவை எனும் செய்தி எனக்கு வந்தடைந்திருந்தது. மகேஷின் ரெசுமே கேட்டு உடனே வா.மணிகண்டனுக்கு மெயில் அனுப்பிவிட்டேன். முதல் முறையாக தொடர்பு கொள்கிறோம் எனும் பெயரில் "உங்க பதிவுகள நான் தினந்தோறும் படிக்கிறேன். படிக்க அருமையா இருக்கு" எனும் பாராட்டு பத்திரம் வாசிக்க அலுவலகத்தில் நேரமில்லை அவ்வளவு பெரிய எழுத்து சோம்பேறி நான். அதனால்  மெயிலின் சாராம்சமான ரெசுமே தேவை என்பதை மட்டும் குறிப்பிட்டு கேட்டிருந்தேன். அனுப்பினார், நான் HR டீமிற்கு கருமமே கண்ணாக பார்வர்ட் செய்துவிட்டு எனது வேலையில் மூழ்கிவிட்டேன். பிறகு அந்த வேலை தொடர்பாக என்ன நடந்தது என்று மணிகண்டனுக்கு தெரியாது.
முகநூல் வழியாக சாட் செய்து எனது அலுவலக HR டீம் விரைவில் மகேஷை தொடர்புகொள்வார்கள் என கூறினேன். "ஒன்னும் பிரச்சினை இல்லை அருள்" என்று கூறினார். அவ்வளவுதான். பிறகு சில நாள் கழித்து ஒரு மெயில் வந்திருந்தது மணிகண்டனிடம் இருந்து. ரெசுமே மெயிலில் ரிப்ளை போட்டு அனுப்பியிருந்தது மெயில் தலைப்பை பார்க்கும் போதே தெரிந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் மெயிலை திறந்து பார்த்த போதுதான் தெரிந்தது ஏதோ ஒரு நிகழ்வுக்கு என்னை அழைத்திருந்தார் என்று. அவசியம் வருகிறேன் என்று பேருக்கு சொல்லிவைத்தேன். இரண்டு மூன்று நாட்கள் கழித்து வழக்கம் போல நினைவில் தங்கவில்லை. பின்பு முகநூலில் "நிகழ்வுக்கு வந்துவிடுங்கள், ஞாயிறு காலை பத்து மணி" என்று இருந்ததை கண்டவுடன் "எழுத்தாளரே உனக்கு மரியாதை கொடுத்து கூப்பிடுறாரு உனக்கென்ன அவ்வளவு பெரிய ஞாயிறு சோம்பேறித்தனம்" என்று மனசாட்சி உறுத்த சுவர் காலண்டரில், தொலைபேசி காலண்டரில், ரிமைன்டரில் என அனைத்திலும் குறித்து வைத்துக்கொண்டேன். 

அவர் கூறிய அந்த ஞாயிறு காலை வந்தது, வீட்டில் பேசி புரியவைத்துவிட்டுதான் கிளம்பினேன் இருந்தும் ஐந்து நிமிட தாமதம். நிகழ்வு நடக்கும் இடமான டிஸ்கவரி புக் பேலசே வெறிச்சோடி கிடந்தது. "ஒரு எழுத்தாளனுக்கு அப்படி என்ன கூட்டம் வந்துவிடும்" என்ற இந்நிகழ்வின் வரவேற்பு பதிவு சதிகாரர்களின் வியூகமில் கூறியது உண்மைதானோ எனும் சிந்தனையில் புக் பேலசின் புத்தகங்களை கொஞ்சம் மேயலானேன். ஆனால் கொஞ்ச நேரத்தில் நிரம்பியது இடம். நாற்காலி கிடைக்குமா என நினைத்தபோது தொடங்கியது நிகழ்வு. யாவரும்.காம் ஜீவ கரிகாலன், கார்டூனிஸ்ட் பாலா, இயக்குனர் கவிதா பாரதி என அனைவரின் பேச்சும் சுவாரசியமாக இருந்தது. பின்னர் வந்து பேசிய நாகேஸ்வரன் மற்றும் சைதை புகழேந்தி ரொம்ப போர் அடிக்க போறாங்க என்று நினைத்தேன் அவர்களும் சரமாரியாக விலாசித்தள்ளினர் சுவாரசியமாக. பிறகு நிகழ்வின் நாயகன் மணிகண்டன் பேச இனிதே முடிந்தது. மசால் தோசை 38 ருபாய் புத்தகத்தை வாங்கி, அவர் கையொப்பம் வாங்கி,  கை குலுக்கிவிட்டு விடுபெற்றேன், பின்பு நிலத்தில் காலை வைங்க படித்து நிகழ்வின் நினைவில் சென்றேன். 

அருள்
இன்னோர் உலகம்

No comments:

Related Posts