Saturday, 14 March 2015

சென்னை படையெடுப்பு


ந்த படையெடுப்பு சென்னையில் மட்டும்தானா தெரியவில்லை, ஒவ்வொரு வெள்ளிக்கிழமை மாலையிலும் மற்றும் திங்கள்கிழமை காலையிலும் வாகன நெரிசல் ஏற்படுகிறது, பண்டிகைக்கு முன்னும் பின்னும் இப்படித்தான். இத்தகைய தினங்களில் மக்கள் கூட்டம் கூட்டமாக பேருந்தில் அல்லது வேறு வாகனங்களில் முண்டியடிப்பது ஏன்?


ஆங்கிலத்தில் exodus எனும் வார்த்தை உண்டு. இடம்பெயர்ந்து கூட்டம் கூட்டமாக மக்கள் தங்கள் இடத்தை விட்டு வேறு ஒரு இடத்தில் குடிபெயர்வது exodus என்றழைக்கப்படுகிறது. 1940களில் உலகில் சிதறிக்கிடந்த பல யூதர் இன மக்கள் தங்கள் இருப்பிடத்தை விட்டு கூட்டம் கூட்டமாக இஸ்ரேல் நாட்டுக்கு குடிபுகுந்தனர் என்பது வரலாற்றில் பதியப்பட்ட ஒரு முக்கியமான நிகழ்வு. இப்போது சென்னையில் அதிகமாக நடைபெறுகிறது, என்ன குடிபெயர்வதுதான் இல்லேயே ஒழிய, மக்கள் வருவதும் போவதுமாக அடிக்கடி நிகழ்கிறது இந்த exodus. ஒவ்வொரு வார இறுதியிலும் சென்னையிலிருந்து வெளியே அதுபோல வார முதலில் வெளியே இருந்து சென்னைக்கு கூட்டம் கூட்டம் என புற்றீசல் போல எங்கெங்கும் காணினும் மக்கள் தலைகளடா !

க்ராக்கி தெரிந்து தனியார் பஸ்கள் சங்கம் வைத்து தாறுமாறாக விலை நிர்ணயக்கின்றன. பலிகடா வழக்கம் போல் பொதுமக்கள் அதிலும் மிடில் கிளாஸ். இந்த மண்டகப்பிடி அரசு போக்குவரத்துத்துறைக்கும் தான். விஷேஷ நாட்களில், எத்தனை ஊர் பேருந்துகளை நகரத்திற்கு கொண்டு வருவது, அதன் நேர நிர்வாகம், ஊழியர்கள் பணியமர்த்துவது, பை பாஸ் வழியா கிண்டி வழியா எனும் traffic திட்டம் கூட வகுத்து வைக்க வேண்டும், இவர்களுக்கே இப்படியென்றால் போக்குவரத்து காவலர்களின் கதி? அவர்களிடமே கேட்டுப்பாருங்கள், "படிச்சு முடிச்சுட்டு ஏதாவது பெரிய கம்பெனிகளில் வேலை செய்ய ஊர்லேர்ந்து வந்துடுறாங்க, வீட்டுக்கு போயி சொந்த பந்தங்கள பாக்கபோறது வாஸ்த்தவம்தான் அதுக்காக இப்படியா, யப்பா எத்தன பேரு?"

இப்படி ஊரு விட்டு ஊரு வந்து பயணிப்பவர்களில் கிராமப்புற  பட்டதாரி இளைஞர்கள்தான் மிக அதிகம் போல, மாற்றுக்கருத்து இருந்தால் தெரிவிக்கவும். எல்லாரும் சென்னையில்தான் பிழைக்க வர வேண்டுமா என்ன? எனும் கேள்விக்கு சாதரணமாக பதில் சொல்லி விட முடியாது.

கிராமபுறங்களில், டவுன்களில் வசிக்கும் மாணவர்கள் கல்லூரி அல்லது அலுவலகம் என்று வரும்போது ஏன் சென்னைக்கு படை எடுக்கவேண்டும்? 

இந்த கணக்கை பாருங்கள், நிலபரப்பில் தமிழ்நாடு சுமார் ஒரு லட்சம் சதுர கிமி; சென்னை சுமார்  ஆயிரம் சதுர கிமி. 
மக்கள்தொகையில் தமிழ்நாடு சுமார் ஆறரை கோடி மக்கள்தொகை, சென்னையில் மட்டும் சுமார் ஒரு கோடி மக்கள்தொகை. 

ஆக நிலபரப்பை பொறுத்தவரையில் நூறு மடங்கு சென்னை ஒரு தமிழ்நாடு என்று சொல்லலாம் ஆனால் மக்கள்தொகையில்?? ஆறு மடங்கு சென்னை ஒரு தமிழ்நாடு. மற்ற நகர்களை விட சென்னையில் மக்கள் நெருக்கம் எவ்வளவு என்று புரிந்து கொள்ள முடிகிறதா?

எதனால் இதெல்லாம்?? கிராமப்புற மாணவர்கள் தான் இத்தகைய படையெடுப்புகளுக்கு காரணம், குற்றம்சாட்டுவதில் அர்த்தமில்லை, இவர்கள்  பெரும்பாலும் முடிவெடுப்பது இப்படித்தான். தங்கள் கல்லூரி காலத்தை முடித்தவுடன் வீட்டை விட்டு வெளியேற வேண்டும், மாநகருக்கு பஸ் பிடிக்க வேண்டும், நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து வீடு வாடகை எடுக்க வேண்டும், வேலை தேடி, கிடைக்கும் நிறுவனத்தில் கொஞ்ச நாள், பிறகு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்ய வேண்டும், நேரடியாக பன்னாட்டு கம்பெனி கிடைத்தால் இன்னும் சுகம், கை நிறைய சம்பாதிக்க வேண்டும், நிறுவனம் வெளிநாடு அனுப்பி வைக்கும், பிறகு கல்யாணம், சொந்த வீடு ஏற்கனவே சொந்த வீடு இருப்பின் முதலீடுக்கு சென்னை அருகே ஒரு காலியிடம், புள்ள குட்டி பெற்றெடுத்து, அதை CBSE இல் சேர்த்து, அது படிப்பதற்கு சம்பாதிக்க வேண்டும். சம்பாத்தியம் கம்மியாக இருந்தால் மேலே சொன்ன அத்தனை விஷயமும் தனது அடுத்த வாரிசுக்கு அப்படியே தொடர்ந்து நடக்கும். 

பிழைக்க நினைக்கும் மனதுக்கு மாநகர் எப்போதும் இன்முகம் கொண்டு வரவேற்கும். மக்கள் அல்லது வாகன நெரிசல், இண்டு இடுக்கில் வீடு, தூசி சுவாசம் என மாநகரின் கோரமுகம் பல.. இந்தக்கோரமுகம் நம்மை  சும்மா விடாது, அது தன்னை எதிர்கொள்வோரின் முகத்தையும் மனத்தையும் இறுக்கி விடும். அவர்களை தன் கையாளாக மாற்றிவிடும். பிறகு  சொத்து சுவீகாரம் எடுப்பதுபோல் மாநகரின் கோர முகத்தை இந்த கையாட்கள் பெற்றும்கொள்வர், பரப்புவர், தங்களுக்குக்குத்தெரியாமலேயே.

ச்சே படிக்குற காலத்துல ஒழுங்கா படிச்சிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா என்று கண்கெட்ட பின் சூரிய நமஸ்கார கேள்வியில் என்ன செய்வது என்றறியாது அலுத்துக்கொள்ளும் மனது. சரி சரி தூங்க போகணும் அப்போதான் நாளைக்கு நேரா நேரத்துக்கு அலுவலகம் செல்லனும் என  தூங்கபோய்விடுவோம்.

பின்ன என்னத்ததான் செய்றது? சொந்த ஊரில் அல்லது மாவட்டத்தில் வேலை தேடலாம்தான், கல்வியறிவிலேயே என் மாவட்டம் பின் தங்கிய நிலையில் இருக்கிறது பின்னர் எப்படி பன்னாட்டு நிறுவனம் தனது அலுவலகத்தை அமைக்கும்? கல்வியறிவும் அதிகம் இருக்கும் கன்னியாகுமரியில்  பன்னாட்டு நிறுவனங்கள்  தொழிற்சாலைகளை  கட்டமைக்குமா அல்லது சிறந்த உட்கட்டமைப்பு வசதி இருக்கும்  மாநகரங்களிலா?

தனி நபர் மீது கேட்கப்படும் கேள்வி வழக்கம் போல் அரசிடமே செல்கிறது, பதில் யாரும் சொல்லக்காணோம். அரசும் இந்த மாநகர் நெரிசல் பிரச்சனையை தற்காலிகமாக தான் வழி தேடுகிறது. பள்ளிக்கூட படிப்பை முடிக்கும் மாணவன் ஏன் மாநகரை நோக்கி ஓடுகிறான் என என்றைக்காவது ஆலோசனை நடத்தியிருக்கிறதா? ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருந்தால் தெரிவிக்கவும், அதில் என்ன முடிவெடுத்திருக்கிறது என்பதனை விவாதிப்போம் காரசாரமாக..

இன்னும் பேசுவோம்...

No comments:

Related Posts