Sunday 8 May 2016

Flora connection #2 : செடித்தனம்

செடித்தனம்.
*************

மரம் வளர்ப்போம்; மழை பெறுவோம்னு சுலபமா எழுதி வைத்துவிட்டார்கள். நடைமுறைனு ஒன்னு இருக்குதில்ல? ..

பிறந்தநாளுக்கு உயிருள்ள பரிசா மீன் வளர்க்கனும்னு ஆசை. ஆனா ஏரியா பூனைப்படை அந்த ஆசையையும் தூக்கத்தையும் கெடுத்துவிடும் என நினைக்கும்போதே பயம். செடிய கூடத்தான் ஆடு மாடு தின்னுடும் சொல்லிக்கலாம். ஆனா காம்பவுன்டுக்குள்ள வளர்த்துக்கலாம்ங்கிற நம்பிக்கை. செடிய வளர்த்து மரமாக்கும் திட்டம்தான் பிறந்தநாள் விசேசம். இத எழுதுறதே அதுக்காகத்தான். ..
செடி மட்டும் 30 ரூபா, தொட்டியோட வேணும்னா 180 ரூபா என்றதுதான் செடி வியாபாரி பேரத்தின் கிளைமேக்ஸ். சரிதான். 500 ரூபாய்க்கு 4 தொட்டிசெடி வாங்கினேன். பணம் பெற்றவன் முகத்துல அவ்ளோ சந்தோசம். இன்னும் படிய பேசிருக்கலாம்தான். ஆனால் அப்போது பணப்பேர சிந்தனையே இல்லை. .. கடந்த கால அனுபவங்களில் கசப்புகள் தந்த நிகழ்வுகள் ஏராளம். அதில் உச்சம் என்பது ஒரு பொருள் வாங்கிய பின்பு காட்டும் அடுத்த நாள் சூட்சும சுணக்கம்தான். அதிர்ஷ்ட வசமாக இந்த செடி விஷயத்தில் அப்படி எதுவும் நடக்கவில்லை என்பது தற்கால கூடுதல் செய்தி. ..

அந்த சுணக்க பயத்தில் முதல் தொட்டியை தூக்கப்போக... எங்கப்போக? தூக்கவே முடீல. இளவட்டக்கல் மறு அவதாரமேதான் அத்தொட்டி. முப்பது பேருக்கு பிரியாணி நிரம்பிய ஓர் அலுமினிய அன்னக்கூடையின் முக்கால்வாசி எடை கொண்டது இது. மண்ணோடு கூடிய எடை மட்டும்தான் இப்படி ஆனா தொட்டியோட உருவம் சாந்தமானது, குட்டியானது. .. நம் உடல் பெருத்துவிட்டால் எந்த எடையையும் தூக்கிவிடலாம் என எண்ணம் கொண்டிருந்தேன். எவ்வளவு பெரிய முட்டாள்தனம்? ..

தரையைத்தேய்த்துக்கொண்டே 4 தொட்டியையும் உரிய இடத்தில் கொண்டுவந்துவிட்டேன். இந்த கடின வேலையை அந்த செடிவியாபாரியை வைத்தே முடித்திருக்கலாம். இந்த தொட்டிகளை வாங்கிய நேரத்தில் கண்ணணைக்கண்ட ராதையைப்போல செடியைக்கண்டதும் அழகில் மயங்கினேன். மற்ற விஷயங்கள் புலப்படவில்லை. அவன் தூரப்புள்ளி ஆனான். .. இப்போ செடிகளுக்கு ஆகாரம் கொடுத்தாகணும். தண்ணீரை பக்கெட் பிடித்து ஊற்ற அதிர்ஷ்டவசமாக உடல் பணிந்தது. ஆனால் தொடர்ச்சியாக இதை செய்ய முரண்டு பிடித்தது. ஒவ்வொரு செடியும் அரை பக்கெட் தண்ணீரை உள்வாங்கக்கூடியது. டியூப் கொண்டு இப்பிரச்சனையை தீர்த்தேன். நான் சல்லித்தனமான விஷயங்களிலும் improvise ஆகிறேன் என்ற செய்தி மன உத்வேகத்திற்கு வழிவகுக்கிற அற்புதத்தை கண்கூடாகவே கண்டேன். ..

 இத்தகைய நடைமுறை விஷயங்கள் மற்றும் கஷ்டங்கள் இருப்பினும், பூக்கள் பூத்துக்குலுங்கியும் இலைகள் தழைத்தோங்கியும் செடியானது வளர்ந்து நிற்பதைக்காணும்போதும் இச்செய்தியைப்பகிரும்போதும் கொஞ்சம் பெருமிதம் கொள்கிறேன். .. படங்கள் சென்ற மாதம் எடுக்கப்பட்டவை. இரு செடிகளும் தொட்டியை விட்டு விலகி தனிமரமாயின

No comments:

Related Posts