Saturday 3 May 2014

தமிழ்க்கவிதைகள் #7: ப்ரியமுள்ள ஜிஜ்ஜுக்குட்டி..

ப்ரியமுள்ள ஜிஜ்ஜுக்குட்டி..
மிக்க தயக்கத்தோடுதான்
இப்படி அழைக்கிறேன்..
எப்படி இருக்கிறாய்..?
பேசத் துவங்கிவிட்டாயா..?
நாங்கள் ஆசைப்பட்டபடி
கிள்ளி முத்தா
கடிச்சு முத்தா
கொஞ்சி முத்தா

எல்லாம் பழகியிருக்கிறாயா..?
அந்த குட்டி முகத்தில்
கோபத்தையும், நைச்சியத்தையும்
எழுதப் பழகிவிட்டாயா..?
இன்றைக்கு இருந்தால்
உனக்கு
நான்கு வயது என்பதை
நீ உணர்ந்திருக்கிறாயா..?
ஸ்கேன் செய்த மறுநாளில்
உன்
பாலென்ன என்பதை
சொல்லவா என்று கேட்ட
தம்பியின் கேள்விக்கு
நாங்கள் சரியென்றே சொல்லி இருக்கலாம்..
அல்லது
ரத்தமாய் நீ
பிரிந்து சென்ற அந்நாளில்
உனக்கு என்ன பெயரிடுவது
என்பதற்காகவாவது
மருத்துவரிடம் கேட்டிருக்கலாம் -
நீ ஆணா பெண்ணாவென்று..
எதுவுமின்றி
ஜிஜ்ஜு என்ற பெயருடன்
இருககிறேன் நான்..
இந்த பெயருக்காக நீ
கோபித்துக் கொள்ள வேண்டியதில்லை தங்கம்..
நீ எந்த பாலென்றாலும்
உன்னை அழைக்க
நாங்கள் வைத்திருந்த பெயர்தான் இது..
இப்போது
பார்க்கும் குழந்தைகளுக்கெல்லாம்
பகிர்ந்து தருவதை
உனக்கே தந்திருப்போம்...
பெயரிலா வாழப் போகிறது அன்பு..
(இதை ஒருநாளும்
எழுத முடியாத
ஒருத்தியின்
கனவிலிருந்து திருடியது..)

No comments:

Related Posts