Tuesday, 1 April 2014

நேர்காணல் #1: ஓரான் பாமுக்


ஓரான் பாமுக்
”ஒவ்வொரு நாளும் சராசரியாக பத்து மணிநேரத்தை எழுதுவதற்காகக் கழிக்கிறேன்”

”எனக்கு ஞாபகம் உள்ளவரை,எதை எழுதுவது என்று எனக்குத் தெரிவதற்கு முன்பாகவே ஒரு நாவலாசிரியனாக நான் முடிவெடுத்தேன்.இரண்டு நாவல்களை ஒரே வகையில் எழுதாமல் பார்த்துக் கொள்கிறேன். வடிவத்திலும்,நடையிலும்,மொழியிலும்,மனப்பாங்கிலும், ஆளுமையிலும் பரிசோதனைகள் செய்வதும்,ஒவ்வொரு புத்தகத்தையும் வித்தியாசமாக யோசிப்பதும் தான் சுவாரஸ்யம்,சவால்.”
-ஓரான் பாமுக்

*******எந்த இடத்தில் அமர்ந்து எழுதுகிறீர்கள்?

பாமுக் : நீங்கள் உறங்குகிற அல்லது உங்கள் துணைவருடன் பகிர்ந்து கொள்கிற இடத்திலிருந்து நீங்கள் எழுதுகிற இடம் தனியாக இருக்க வேண்டுமென்பது என் அபிப்ராயம்.குடும்பச் சடங்குகளும் பழக்கங்களும்
கற்பனையை எந்த விதத்திலோ கொன்றுவிடுகின்றன.எனக்குள்ளிருக்கும் அரக்கனை அவை கொன்றுவிடுகின்றன.கற்பனை செயலாற்றத் தேவையான,மற்றோர் உலகத்திற்கான ஏக்கத்தை,சுவாரஸ்யமற்ற குடும்ப வழமை மங்கிப்போக வைத்து விடுகிறது.எனவே பல வருடங்களாக,என் வீட்டிலிருந்து தள்ளி ஓர் அலுவலகத்தையோ அல்லது சிறியதோர் இடத்தையோ எழுதுவதற்காக வைத்திருக்கிறேன்.எனக்கு வெவ்வேறு குடியிருப்புகள் எப்போதுமே இருந்திருக்கின்றன.
என் மனைவி கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி செய்யும் போது ஒரு பாதி செமஸ்டர் காலத்தை நான் அமெரிக்காவில் கழித்தேன்.மணமான மாணவர்களுக்கான குடியிருப்பில் நாங்கள் தங்கியிருந்தோம்.போதிய இடமின்மையால் அதே இட்த்தில் நான் தூங்கவும் எழுதவும் வேண்டியிருந்தது.குடும்ப வாழ்க்கையின் மிச்சங்கள் சுற்றிலும் இறைந்திருந்தன.இது என்னை வீழ்த்தியது.காலையில் ஏதோ வேலைக்குப் போகிறவன் போல என் மனைவியிடம் ‘குட்பை’ சொல்லி விட்டு வீட்டை விட்டு வெளியே வந்து சில ’பிளாக்’குகளைச் சுற்றிக் கடந்து விட்டு அலுவலகத்திற்குள் நுழையும் ஒருவனைப் போன்ற பாவனையில் திரும்ப வீட்டிற்கு வருவேன்.
பத்து வருடங்களுக்கு முன்னால் பாஸ்ஃபோரஸ் ஜலசந்திக்கெதிரே பழைய நகரத்தை நோக்கியபடியிருந்த ஒரு குடியிருப்பை நான் கண்டுபிடித்தேன்.இஸ்தான்புல்லின் மிகச்சிறந்த ‘வ்யூ’வைக் கொண்டிருந்தது அது.நான் வசிக்குமிடத்திலிருந்து இருபத்தைந்து நிமிட நடையில் இருந்தது.புத்தகங்கள் நிரம்பி,ஜன்னலையொட்டி என் மேஜை அமைந்த இடம்.ஒவ்வொரு நாளும் சராசரியாக பத்து மணிநேரத்தை அங்கே கழிக்கிறேன்.

*****ஒரு நாளைக்கு பத்துமணி நேரமா?

பாமுக் : ஆம்,நான் ஒரு கடுமையான உழைப்பாளி.அதை அனுபவித்துச் செய்கிறேன்.பேராசைக்காரனென்று சிலர் என்னைச் சொல்வதில் உண்மை கூட இருக்கலாம்.ஆனால் நான் செய்வதை ரசித்துச் செய்கிறேன்.ஒரு குழந்தை அதன் பொம்மைகளோடு விளையாடுவதைப் போல என் மேஜையில் அமர்ந்து பணியாற்றுவது எனக்கு விருப்பமாக இருக்கிறது.முக்கியமாக அது ஒரு வேலைதான்,ஆனால் அதுவே விளையாட்டாகவும் சந்தோஷமாகவும் கூட இருக்கலாம்.

*******நீங்கள் எப்போதாவது கவிதை எழுதியதுண்டா?

பாமுக் : இதை அடிக்கடி கேட்டிருக்கிறார்கள்.பதினெட்டு வயதில் துருக்கி மொழியில் சில கவிதைகள் எழுதி பிரசுரமும் ஆகியிருக்கின்றன.அதன்பின் விட்டுவிட்டேன்.இதற்கு என் விளக்கம் என்னவென்றால் கவிஞன் என்பவன் மூலமாகத்தான் கடவுள் பேசுவதாக நினைக்கிறேன்.கவிதையால் நீங்கள் பீடிக்கப்பட வேண்டும்.கவிதை எழுத நானும் முயற்சித்தேன்.ஆனால் கொஞ்ச காலம் கழித்து கடவுள் என்னிடம் பேசுவதில்லை எனக் கண்டு கொண்டேன்.இது எனக்கு வருத்தமாக இருந்தது.அதன்பின்,கடவுள் என் மூலமாகப் பேசுவதாக இருந்தால் அவர் என்ன பேசுவார்?என்று கற்பனை செய்ய முயற்சித்தேன்.நான் மிகவும் சிரத்தையாக,மெதுவாக,அது உரைநடை எழுத்தாக,புனைகதை எழுத்தாக இருந்தது.எனவே ஒரு குமாஸ்தாவைப் போல நான் பணியாற்றத் தொடங்கினேன்.மற்ற எழுத்தாளர்கள் நான் இப்படிக் கூறுவது ஓர் அவமதிப்பாக நினைக்கலாம்.ஆனால் இதை நான் ஒப்புக் கொள்கிறேன்.நான் ஒரு குமாஸ்தாவைப் போல உழைக்கிறேன்.கவிஞனைப் போலல்லாமல் நாவலாசிரியனுடையது ஒரு குமாஸ்தா பணியைப் போன்றது என்பதை அடிக்கோடிட்டுச் சொல்கிறேன்.நாவலாசிரியன் ஓர் எறும்பைப்போல நெடுந்தூரத்தை அவனது பொறுமையால் மெதுவாகக் கடக்கிறான்.ஒரு நாவலாசிரியனின் அருளிப்பாட்டினாலும் கற்பனாவாதப் பார்வையிலும் நம்மைக் கவர்வதில்லை.அவன் பொறுமையினால்தான்.

*******போகப்போக,உங்கள் எழுத்து உங்களுக்கு எளிதாக விட்டதென்று நீங்கள் கூறுவீர்களா?

பாமுக் : துரதிருஷ்டவசமாக இல்லை.என் கதாபாத்திரம் அறை ஒன்றிற்குள் நுழைய வேண்டும் என்று சில நேரங்களில் தோன்றும்.இருந்தும் அவனை எப்படி உள்ளே கொண்டு வருவது என்று தெரியாது.எனக்குத் தன்னம்பிக்கை கூடுதலாகவே இருக்கலாம்.அதனால் பரிசோதனைகள் கூடுதலாகவே இருக்கலாம்.அதனால் பரிசோதனைகள் எதையும் புரியாமல் பேனாவின் முனைக்கு என்ன வருகிறதோ,அதை எழுதுவதால் சிலவேளைகளில் அது உதவிகரமாக இருப்பதில்லை.கடந்த முப்பது வருடங்களாக நான் புனைகதை எழுதி வருகிறேன்,எனவே நான் சிறிதளவு முன்னேறியிருப்பதாகத் தான் நினைக்க வேண்டும்.இருந்தும் சிலநேரங்களில் வழியேதுமில்லாத முட்டுச்சந்தில் வந்து நின்று விடுகிறேன்.அறைக்குள் ஒரு பாத்திரத்தால் நுழைய முடியாது,என்ன செய்வதென்று எனக்கும் தெரியாது,இன்னமும்.முப்பது வருடங்கள் கழித்தும்.
புத்தகங்களை அத்தியாயங்களாகப் பிரித்துக் கொள்வது நான் சிந்திக்கும் முறைக்கு மிக முக்கியமானது.ஒரு நாவலை எழுதும் போது,கதைப்போக்கை முழுமையாக நான் அறிந்திருந்தால்-பெரும்பாலும் எனக்குத் தெரிந்திருக்கும்-அதனை அத்தியாயங்களைப் பிரித்து ஒவ்வொன்றிலும் நிகழவேண்டிய விவரங்களை யோசித்துக்கொள்வேன்.முதல் அத்தியாயத்தில் துவங்கி வரிசையாக எழுதுவதென்பது அவசியமில்லை.எனக்கு தடங்கலாகும் போது அதுவொன்றும் எனக்கு மோசமான விஷயமில்லை-என் கற்பனையில் எது கிளைக்கிறதோ அதை எழுதத் தொடங்கி விடுவேன்.முதல் அத்தியாயத்தை எழுதிவிட்டு ஐந்தாவதிற்குச் சென்று விடுவேன்.பின் அது எனக்கு உவப்பாக இருக்காவிட்டால் பதினைந்தாவது அத்தியாயத்திற்குச் சென்று அங்கிருந்து தொடர்வேன்.

தமிழில் : ஜி.குப்புசாமி.

(தீராநதி மே 2008.ஜீன் 2008 ஆகிய இரு இதழ்களில் வந்த பாமுக்கின் நேர்காணலில் மே 2008 இதழிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில பகுதிகள்)

நன்றி : தீராநதி (மே 2008)

No comments:

Related Posts