Tuesday, 23 June 2015

இன்று நேற்று நாளை திரைப்படம்: எந்த வகையறா படம் இது?

ன்னும் சிலதினங்களில் இந்த சயின்ஸ் பிக்சன் படம் வெளியாகும் என நினைக்கிறேன், இப்படத்தின் teaser காண இங்கு சொடுக்கவும் அல்லது teaser ஐ கீழே காணவும். 

காலப்பயணம் அதுவும் பின்னோக்கிய பயணம் என்றுமே கொஞ்சம் சிக்கலான விஷயம்தான். நம்மூர் மக்கள் இதன் teaser க்கு கொடுத்த வரவேற்பு
கொஞ்சம் ஆச்சர்யம் கொடுக்கிறது. இப்படிப்பட்ட முயற்சிகளை ஒதுக்கித்தள்ளியவர்கள் நம்மூர்மக்கள் என மறக்கலாகாது. ஒதுக்கித்தள்ளிய படங்கள் இப்போது ஞாபகம் வரவில்லை.

இப்படத்தை காணும் முன்னர், ஹாலிவுட்டில் 80களில் வெளிவந்த Back to the Future - Trilogy ஐ நாம் பார்த்துவிட்டால் தேவலாம். பார்ப்பதால் ஒரு நன்மை, பின்னோக்கிய காலப்பயணத்தின் ஆபத்துகள் நமக்கு புரியவரும் ஆனால் கெடுதல் என்னவென்றால் இந்த படத்தின் தரத்தை ஒப்பீடாக எடுத்துக்கொள்வது. ஒருவேளை இ.நே.நா படம் இன்னும் சிறப்பாக அமைந்தால் நலம், இல்லையென்றால் மேல்சொன்ன படி அங்கீகாரம் கிடைப்பது கஷ்டம்தான். இயக்குனருக்கு பிற்காலத்தில் பாராட்டு விழா எடுத்தாலும் தற்போதைய நிலையில் யாரும் இதுபோல் சயின்ஸ் பிக்சன் படமெடுக்க முன் வருவார்கள் என்பது சந்தேகமே. 

ஆங் ஞாபகம் வந்துவிட்டது, அப்புச்சி கிராமம் எனும் திரைப்படத்தைதான் மறந்துவிட்டேன். மக்கள் ஏன் அப்படத்தை ஒதுக்கினார்கள் என்ற விவாதத்திற்கு வருவதற்கு முன்னர், இது போன்ற டைம் டிராவல் சயின்ஸ் பிக்சன் படங்களில்  உலகத்திலேயே முன்னோடியான  அல்லது முதன் முதலில் வெளிவந்த படைப்பு எது என விக்கிப்பீடியாவை கேட்கையில் கிடைக்கிறது ஒரு தகவல்.

மகாபாரதத்தில் ரெவைத்தா எனும் அரசன் பிரம்மா கடவுளை பார்க்க காலம் கடந்து செல்கிறான், சந்தித்து விட்டு திரும்பும்போது பல வருடங்கள் கடந்து போயின என்பது அவருக்கு தெரியவந்தது.  இதில் நுட்பமான விஷயம் அரசருக்கு வயதே கூடவில்லை. இதெல்லாம் இதிகாசங்களில் ஒளிந்திருக்கும் விஷயம். கிட்டத்தட்ட விமான டிசைன் முன்னோடி நம்மவர்கள் எனும் மார்தட்டி சொல்லவேண்டிய விஷயங்கள் என்பதால் இதிகாசங்களை தவிர்த்துவிடுவோம்.  

1895 வருடம், "த டைம் மிஷின்" என்று H.G.Wells எழுதிய நாவலால்தான் முதன் முதலில் இப்படி ஒரு கற்பனை விஷயம் இருப்பதென்று வெளிஉலகினுக்கு தெரியவந்தது. அதற்கு முன்பு எழுதியவைகள் நிறைய இருந்தாலும், எதுவும்  "த டைம் மிஷின்" போன்ற பிரசித்தி பெற்றவை இல்லை என்கிறது விக்கிப்பீடியா.

Back to the future படத்திற்கு வருவோம், படத்தின் பேரே சற்று வித்தியாசமாக இருந்தது மேலும் இதை தயாரித்தவர் ஜுராசிக் பார்க் புகழ் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் என்றதை பார்த்தவுடன் படத்தை பார்க்கவேண்டும் என்ற ஆவல் கூடியது. AXN தொலைக்காட்சியில் தான் முதன் முதலில் பார்த்ததாக நினைவு. அப்போது எனக்கு வயது 16. 

படத்தில் கதாநாயகன், கிறுக்கு விஞ்ஞானியிடம் நட்பு பாராட்டுகிறான். அவர் ஏதோ ஒரு கருவியை கண்டுபிடிக்க அந்த சோதனை முயற்சியில் கதாநாயகன் சிக்குகிறான். கதாநாயகன் காலேஜ் செல்லும் இளைஞன், கிறுக்கு விஞ்ஞானிக்கு சுமார்  அறுபது   வயது இருக்கும். இவர்களது காலப்பயணத்தின் கலாட்டா முயற்சிகளே படத்தின் கரு.

மொத்தம் மூன்று பாகங்களாக வந்தது, இன்று நேற்று நாளை படத்தின் trailer பார்த்தவுடன் இந்த படங்களை  மீண்டும் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தூண்டிவிட்டது. 

இந்த action படத்தில் நகைச்சுவைக்கும் குறை இல்லை. பின்னோக்கிய காலப்பயணத்தின் விளைவாக தன் இளவயது தந்தையை காண்கிறான், அவருக்கு கல்யாணம் ஆகவில்லை என்று இவனுக்கு தெரியவருகிறது. தன தாயும் தந்தையும் ஒரு இடத்தில் சந்தித்து காதலை சொன்னால்தான் அவர்கள் இருவருக்கும் கல்யாணம், உறவு எல்லாம் அதற்கு பிறகுதான் கதாநாயகன் பிறக்க வேண்டும். ஆனால் கதாநாயகன் முன்னோக்கி சென்று  நடப்பவைகளை ஓரமாக நின்று கவனிக்காமல் தவறுதலாக குழப்பத்தை உண்டாக்குகிறான். அதனால் அவனது அப்பா அவனது அம்மாவை சந்திக்க முடியாமல் போகிறது. இந்த சந்திப்பு நிகழாமல் போனதால் அவர்களுக்கு பிறந்தாக வேண்டிய கதாநாயகனின் அக்காள் பிறக்காமல் போகிறாள். நிகழ்காலத்தில் வைத்திருந்த குடும்ப போட்டோவில் அக்காள் காணாமலாகிறாள். அப்படியே இவர்கள் இருவரும் சந்திக்காமலே இருந்தால் கதாநாயகன் எப்படி பிறக்க முடியும் அதனால் அவனது உயிர் மறைந்து விடும் என்ற பயத்தில். தன் அப்பாவிடம் தன் அம்மாவை ப்பற்றி பேசுகிறான். தான் இன்னார் என்பதை தன் தந்தையிடம் கூறாமலேயே. இவனது பெற்றோரின் சந்திப்பை கதாநாயகன் இவனே திட்டமிடுகிறான்(கஷ்டக்காலம்). ஆனால் அங்குதான் வந்தது வினை. இவனது அம்மா தற்செயலாக இளைஞன் கதாநாயகனை     காண்கிறாள். தன மகனென்று தெரியாமல் அவன் அழகில் மயங்குகிறாள். கதாநாயகனுக்கு இது அதிர்ச்சி , படத்தை பார்க்கும்போது நமக்கு குபீர் சிரிப்பு நிச்சயம். இந்த குழப்பத்திலிருந்து எப்படி மீள்கிறான் என்பதே மீதி கதை. 
நேரம் கிடைப்பின் பார்க்கவும், இன்று நேற்று நாளை திரைப்படத்தின் முயற்சிக்கு வெற்றி கிடைக்க வாழ்த்தவேண்டும். ஒரு வேளை படத்தில் குறை இருப்பின் முயற்சியின் வினையைக்கொண்டு அணுகுதல் தற்போதைய தமிழ் சினிமாவின் சூழலுக்கு உகந்ததாக்கும். 

நன்றி 
விடுப்புமுனி 
இன்னோர் உலகம்

No comments:

Related Posts