Sunday, 9 March 2014

சிறுகதைகள் #3: நொந்தகுமாரன் கலம்பகம்


'அப்பானு ஒன்னெலாம் சொல்லி ரொம்ப நாளாச்சி, வெளிலதான் வா,போனு சும்மா கூப்பிட்றேன், உள்ளுக்குள்ள அந்த மரியாத கூட இல்ல உனக்கு, அத எப்பவோ நீ கெடுத்துக்கிட்ட, தள்ளிப் போ அங்க'

கோபத்தை இன்னும் வெளிப்படுத்தும் விதமாக கதவை ஓங்கி அறைந்துவிட்டு செருப்பை போட்டுக்கொண்டு கிளம்பினான் குமர். பின்பனி இரவு,கிட்டத்தட்ட தெரு அடங்கும் நேரம். நடக்கையில்  கோபத்தில் கொதித்துப் போயிருந்த இரத்தம் குளிருக்கு அடங்குவதாய் இல்லை. 

'இன்னும் கேட்டிருக்கனும் அவன,மூஞ்சி தொங்கி போச்சில்ல இப்ப உனக்கு, சாவுடா' உதிரியாக மனதுக்குள் திட்டிக்கொண்டே நடந்தான்.நெடு நாட்கள் அடக்கி வைத்திருந்தது,நிம்மதியாகவும் இருந்தது.வீழ்த்திவிட்ட நிம்மதி.

ஓரளவுக்கு சுள்ளுனு உறைக்கிற மாதிரியும் தெளிவாகவும் அதே சமயம் சுருக்கமாகவும் அனிச்சையாக இப்போது வெளிவந்தது மனநிறைவாகத்தான் இருந்தது. ஆச்சர்யமாகவும்தான், இல்லையென்றால் உணர்ச்சிவசப்பட வேண்டியதாய் இருந்திருக்கும் கொஞ்ச நேரம் அங்கே இருந்திருந்தால்.பெருமூச்சொன்று விட்டுக்கொண்டான்.

தெரு அமைதியாகத்தான் இருந்தது,நாயொன்று வள்ளென்று குரைத்தது.கீழே கிடந்ததிலேயே கொஞ்சம் பெரிய கல்லை எடுத்து முழு பலத்தையும் பிரயோகித்து எறிந்தான்,அது எங்கோ விலகிச் சென்று சுவற்றில் அடித்து இரண்டாக உடைந்தது, இன்றில்லை என்னைக்குமே குறி சரியாக இருந்ததில்லை அது தெரிந்திருக்குமோ என்னவோ எந்த சலனமும் இன்றி நின்றிருந்தது அந்த நாய். 'சனியனே ஓடிடு' என்று ஆற்றாமையில் கத்திவிட்டு நடந்தான். எப்படினாலும் வீட்டுக்கு திரும்பி போகத்தான் வேண்டும் இது ஒன்றும் புதிதில்லை. இதற்க்குமுன் கூட இப்படி நடந்திருக்கிறது, ஆனால் அப்போதெல்லாம் கோபம் அதிகமாகி பேச்சே வராது, ஒரு முற்றிய சமயத்தில் 'வாய மூட்றா, பேசாத' சத்தமாக கத்திவிட்டு கிளம்பிவிடுவான், 'சே சரியா திட்டாம வந்துட்டோமே' என்று நினைத்து வருந்தியதுண்டு.

பெரும்பாலும் அப்பாதான்  முதலில்  சண்டையை ஆரம்பித்து வைப்பதால் அவர் நிலையாகத்தான் இருப்பார், இவனுக்கு ஆரம்பத்திலேயே உடல் சூடேறிவிடும். அவரின் புண்படுத்தும் வார்த்தைக்கான சரியான பதிலை சொல்லத் தெரியாமல் அழுத்தம் அதிகமாகி வாய் குழறி இயலாமையினால் ஒன்று எதையாவது போட்டு உடைப்பான் அல்லது ஒருமையில் பேசிவிட்டு கிளம்பிவிடுவான்.ஆனால் இந்த முறை நிதானமாக இருந்தான்.

நெடு நாட்கள் மனதுக்குள்ளே சொல்லிப்பார்த்துக் கொண்டான். தக்க தருணம் அமையும் வரை காத்திருப்பது. எதிராளி இங்கு தந்தையாதலால் வீழ்த்துவதென்பது எளிதான வழிதான். நிராகரித்தல், மகன் என்ற அந்த அடிப்படை நம்பிக்கையில் அவர் எடுத்துக்கொண்ட அக்கறையோ அத்துமீறலோ அல்லது எல்லா அப்பாக்களுக்கும் மகன்களை காட்டிலும் மகள்கள் மீது காட்டப்படும் அதீத பாசத்தின் உளவியலால் இயற்கையாகவே உள்ள அந்த புரிந்துகொள்ளமுடியாத பகையோ அது எதுவோ கன்றாவியோ அந்த அடிப்படையை நிராகரித்தல். இதை அவன் சிந்திக்காவிட்டாலும் நிராகரிப்பு என்பது இங்கு எளியதான ஒரு போர் தந்திரம் என்பதை இயல்பாகவே அறிந்திருந்தான்.

'எல்லாத்துக்கும் சேத்து வச்சி இன்னிக்கி சொல்லியாச்சு,எல்லா அப்பனுங்களும் இப்படித்தான் இருப்பனுங்களா,இல்லையே ஒவ்வொருத்தனும் அவனோட பையனுக்கு எப்டிலாம் சப்போர்ட் பண்றான்.இவனும் இருக்கானே எப்பப்பாரு குறை சொல்லிக்கிட்டே, அந்த மாதிரி சொல்லியே அது என்னோட குறை இல்லைனாலும் அப்படியே ஆக்கிட்டான்,ஒன்னா ரெண்டா சொல்றதுக்கு,சின்னப் பையனா இருக்கும்போதேதான் ஆரம்பிச்சிட்டான்,கூட படிக்கிறவன சொல்லிக் காட்டி திட்றது, அவனப் பார்த்து திருந்தேன்டா, அவன் மூத்திரத்தக் குடிடான்னு, அப்பவே அப்பிருக்கனும் இவன. ஒவ்வொரு விஷயத்துக்கும் இதுமாதிரியே சொல்லி என்னோட தன்னம்பிக்கை, சுயமதிப்பீடு எல்லாத்தையும் தகர்த்துட்டான். இன்னிக்கி சின்னதா எதாவது ஒன்னு செய்யனும்னா கூட எவ்வளவு சந்தேகம்,பயம்,அவநம்பிக்கை, வாழ்க்கையே கெடுத்துட்டான் ஒத்தா நல்லா வாயில வருது' வாய்க்குள்ளே முணுமுணுத்துக் கொண்டே நடந்தான்.
ஏதோ படித்து,ஏதோ வளர்ந்து,ஏதோ ஒரு பட்டம் பெற்று ஏதோ வேலைக்கு செல்லும் சில சராசரிகளின் நிலைமையைவிட மோசம் என்று சொல்ல முடியாது ஆனாலும் அப்படித்தான் இருந்தது குமாரின் நிலைமை.தான் இவ்வாறு இருப்பதற்க்கு முழு காரணம் தன் தந்தைதான் என்று திடமாக நம்பினான்.சிறு வயதிலிருந்தே தனக்கு ஆர்வமுள்ள விஷயங்களை செய்யவிடாமல் அவருடைய கனவுகளை தன்மீது  திணித்து, அதையும் செய்யமுடியாமல் அடைந்த தோல்விக்கும் தன்னையே பொறுப்பாக்கி, தோல்வியால் ஏற்படும் மன உளைச்சலும் சகமனிதர்களிடத்தில் ஏற்படும் அவமானமுமாக சேர்ந்து மனதின் எங்கோ ஆழத்திலிருந்து எப்படியோ எப்போதாவது மட்டும் வெளிப்படும் அச்சம் அச்சமயம் முதல் அதுவே அவனாக ஆனதும், பின் அதுவே பழகிப்போய் எந்த ஒரு சின்ன செயலுமே செய்வதற்க்கு பயந்து தயங்கி அந்த பலவீனத்தை மறைக்க தன்னை ஒரு சோம்பேறியாக வெளிக்காட்டிக் கொண்டு கோழை என்பதைவிட சோம்பேறி என்று சொல்வது பரவாயில்லை என்ற மனநிறைவோடு இருக்க உதவிய பெருமையும் தன் தந்தையையே சேரும் என்று முழுமையாக நம்பினான்.

பின்னாட்களில் சில அடிப்படை தவறுகள் தெரிந்தே செய்வதற்க்கும் தனக்கு நியாமான காரணங்கள் இருப்பதாக நினைத்து சமாதானமடைய வேண்டியிருந்தது. தவறென்று தெரிந்தபின்பும் அதில் மனம் ஒன்றிப்போக இதுமாதிரி கற்பிதம் செய்து கொள்ள வேண்டியிருக்கிறது.முதன்முதலில் சிகரெட் பிடிக்கும் பழக்கம் அப்படித்தான் ஏற்பட்டது.எப்படியோ புகையை இழுத்து அதனுடைய போதையை அனுபவித்த பிறகு இது கேடு என்றும் தெரிந்துதான் இருந்தது. ஆனால் ஏற்பட்ட தோல்விகளும் அவமானங்களும் அதற்க்கு முழுபொறுப்பாளராக நினைத்த தந்தையையும் நினைக்கையில் உலகத்தில் தான் மட்டும் எல்லா சமயங்களிலும் எல்லாராலும் கைவிடப்பட்டுவிட்டதாக ஏற்பட்ட எண்ணம் தீராத தனிமை உலகம் ஒன்றில் தள்ளியது.தான் இவ்வாறு வஞ்சிக்கப்பட்டதால் இந்த சின்ன சிகரெட் போதையை அனுபவிக்க தனக்கு எல்லா உரிமையும் உண்டு என்று நினைக்க வைத்தது அது.

இது எவ்வளவு அபாண்டமானதொரு பொய் என்றும் பின் அறிய நேர்ந்தது என்றாலும் வயது முதிர்ச்சிக்கேற்ப அதை தத்துவார்த்தமாக பரிசீலித்து எதிர்கொண்டு சமாதானமடைய கற்றுக்கொண்டான்.

இதையெல்லாம்விட அவன் தந்தைமேல் தீராத வன்மம் கொள்ள வைத்தது, தன்னுடைய காதல் விஷயத்தில் ஏற்பட்ட கசப்புகளுக்கும் இழப்புகளுக்கும் அவரே காரணம் என்றும் நினைத்ததுதான்.காதலைப் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கல்லூரியில் சைட் அடித்து சுற்றித் திரியும்போது எப்படி நடந்தது என்று தெரியாமலேயே இருவருமே காதல் வயப்பட்டு உலகத்தையும் கூடவே தன்னையுமே மறந்த நாட்கள், தன் பலவீனத்தை மறக்கடிக்க செய்த நாட்கள், ஆனாலும் ஒரே பெண்ணை அளவில்லாமல் காதலிக்க  முடியாது என்பதாலோ இல்லை அப்படியும் காதலித்தால்  காதலை தவிர்த்து மற்ற சிந்தனைகளுக்கு இடம் கொடுக்க நேரிடும் என்பதாலோ அவனுள் இருந்த அந்த பல்வீனமானவன் இப்போதும் எதிரிமறையாக சிந்தித்ததின் விளைவு அந்த காதலும் முடிவு பெறாமல் போனது.காதல் முறிந்த சில நாட்கள் அதன் வலியும் பின்னே 'அட கிடைச்ச சமயத்துல அவள அனுபவிக்க தவறிட்டோமே' என்று வாய்ப்பை தவறவிட்ட ஏமாற்றமும் தான் மிச்சமானது. பயங்கரம் என்னவென்றால் அதற்க்கும் தன் தந்தைதான் காரணம் என்று நம்பினான். அவனுள் இருந்த பலவீனமானவன் காதல் விஷயத்திலும் தலைத்தூக்கியதுதான் காதல் முறிவுக்கும் காரணமாக இருந்தது.அந்த பலவீனமானவனை உருவாக்கியது தன் தந்தைதானே என்று நம்பினான்.

எப்படியோ ஒருவாறு பட்டம் பெற்றாகிவிட்டாலும் வேலை தேடும் பயங்கரம் பயமுறுத்தியது. தோல்வியை ஒப்புக்கொண்டு மேற்படிப்புக்கு செல்வதென்றாகி கொஞ்ச நாள் தப்பித்து அந்த காலக்கெடுவும் முடிந்து இப்போது இப்படி இவ்வாறு இருக்கும் நிலைமைக்கு வந்திருந்தான். ஒன்று அந்த பலவீனமானவனை ஒழிக்க வேண்டும் இல்லை வெளிப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.அதற்க்கான போராட்டத்தில் சில நேரம் தோல்வியடைய நேரும்போது அவன் தந்தை இப்படியாக அவனுள் மிதித்து நசுக்கப் படுவார்.

'இவன்லாம் எதுக்குயா கல்யாணம் பண்ணி கொழந்த பெத்துக்குறான்,இப்டி சமூகத்துல ஒன்னுமில்லாம ஆக்கவா, இவனுக்குலாம் கல்யாணம் செஞ்சி வச்சான் பாரு அவன சொல்லனும், ஓத்தா வளர்க்க தெரியலனா எங்கயாவது தெருலயாவது விட்டிருக்கலாம்,சாதாரன மனுஷனுக்கு கிடைக்கிற சந்தோசத்தையாவது அனுபவிச்சிட்டு போயிருப்பேன்' ஆனால் அதுவொன்ன்றும் அவ்வளவு எளிதில்லை என்றும் உள்ளூர அறிந்திருந்தான்.

அப்படியொன்றும் மோசம் இல்லை. குமாரின் அடிப்படைத் தேவைகளை என்றுமே நிறைவேற்றித்தான் வந்திருக்கிறார்.அதை புரிந்து கொள்ளாமலில்லை. அப்பாக்கள் என்றுமே மகன்களை புரிந்துகொள்வதில்லை. மாறாக எல்லா மகன்களும் அப்பாக்களை புரிந்துகொள்ளும் தருணம் ஒன்று நிச்சயமாக ஏற்படுகிறது.

அருகில் இருந்த கடையொன்றில் சிகரெட் வாங்கி பற்றவைத்து இழுத்தான். எப்போதாவதுதான், இது மாதிரி நியாமான காரணங்கள் அமையும்போது.புகைப்பிடித்து விட்டு மிஞ்சிய துண்டை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான்.இதுவும் கொஞ்ச நாளாகத்தான் மூளை வேறு ஏதோ சிந்தனையில் இருக்கும்போது மற்ற உருப்புகள் தங்களது அன்றாட கடமையை தானாகவே செய்ததின் விளைவு இது.பின் தொடைச் சதையில் சூட்டை உணர்ந்து அதை வெளியே எடுத்துப் போட்டான்.

இதெல்லாமே தான் நினைத்திருந்தால் மாற்றியிருந்திருக்கலாம் என்றும் சில சமயங்களில் தோண்றும்,ஆனால் தன் இயலாமையை மறைக்க எதன்மீதாவது முழுபழியையும் ஏற்றி வைப்பது அடைந்ததும் அடையப்போவதுமான தோல்விகளுக்கும் முன்கூட்டியே ஆறுதலாக அமையும் என்பதால் இது சாலச் சிறந்த வழியாக நினைத்தான். அதற்க்கான வேலைகளில் மனமும் மூளையும் விரைவாக இயங்கும்.நடந்து முடிந்த சம்பவங்களை அடுக்கடுக்காக நினைத்துப் பார்த்து காரண கர்த்தாவான தன் தந்தையையும் நினைத்து தவறு நம்முடையதல்ல என்று மனம் அமைதியை ஏற்படுத்திக்கொள்ளும்.

புலம்புவதும் பிடித்துதான் போயிருந்தது ,மனதை பாதித்த சம்பவங்களை நினைத்துப் பார்த்து புதிப்பித்துக் கொள்வது தற்போதுள்ள வலிக்கு ஆறுதலாக இருந்தது.அப்படி ஒன்றும் நினைத்து மந்தஹாசம் புரியும் சம்பவங்களில்லைதான், தான் இவ்வாறு இப்படி இருப்பதற்க்கு அவை விளக்கம் அளிப்பதால் அடைந்த பொய்யான ஆறுதல்.

நடந்த களைப்பில் பசி அதிகமானது.

வீட்டுக்கு போனால் அவருடைய முகத்தை பார்க்க வேண்டியிருக்கும், நிச்சயமாக காயப்படுத்தும் என்ற எண்ணத்தில் வெளிப்பட்ட அந்த வார்த்தைகளை உள்வாங்கி அதிர்ச்சியாகி தளர்ந்த அப்பாவின் முகம் ஞாபகம் வந்தது. தமிழ் சினிமா ஒன்றில் வரும் ஒரு காட்சி நினைவுக்கு வருவதை தடுக்கமுடியவில்லை.நாயகனின் இதே மாதிரி புண்படுத்தும் வார்த்தையால் தந்தை கதாபாத்திரம் நெஞ்சை பிடித்துக்கொண்டு உட்க்காரும்.பின் ஒரு நாள் தந்தையை நினைத்து கட்டிலில் போய் படுத்து கைகளால் வாயைப்பொத்திக்கொண்டு அழுகிற காட்சி.சினிமாவின் தாக்கம் இவ்வளவு தூரம் இருக்கும் என்று நினைக்கத்தான் இல்லை.அந்தக் காட்சியை நினைத்துப் பார்த்தான்,அது மாதிரி அழுதால் நன்றாகத்தானிருக்கும்.எதற்க்கு?எதற்க்கோ.

வீட்டுக்கு திரும்பி நடந்தான்.

அம்மாதான் கதவை திறந்தது. 'ஏம்பா அப்டி சொன்ன,சாப்ட்டு கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டு நெஞ்சு வலிக்கற மாதிரி இருக்குனு படுக்கப் போய்ட்டாரு' இப்படி ஒரு வசனத்தை அம்மாவிடம் எதிர்பார்த்தான்.இல்லையென்றதும் கொஞ்சம் ஏமாற்றமாக்த்தான் இருந்தது.காட்டிக்கொள்ளவில்லை.

'ஏன்டா சீக்கிரம் வந்து திண்ணுட்டு ஆள விட வேண்டியதுதான ஏன் இப்டி தூக்கத்த கெடுக்குற' அவரவர் கஷ்டம் அவரவர்க்கு.

எதையும் பேசாமல் உள்ளே நுழைந்து அப்பா தூங்கிவிட்டிருந்த அறையை தாண்டிப் போய் தண்ணீர் குடித்துவிட்டு திரும்பி வந்து எட்டிப்பார்த்தான்.அப்பாவின் குறட்டை ஒலி அதிர்ந்தது,தொப்பை வெகுவாக ஏறி ஏறி இறங்கியது.நன்றாக தூங்கிவிட்டிருந்தார்.மனதை தேற்றிக்கொண்டு பெருமூச்சொன்று விட்டான்.

சாப்பிட்டுவிட்டு வந்து படுத்துக்கொண்டான். இன்றைக்கு எப்படியாவது அழ வேண்டும். சுலபமான காரியம் போல் தெரியவில்லை.

அந்த சினிமா காட்சியை நினைவுப் படுத்திக் கொண்டான்.அப்பாவின் தளர்ந்த முகம் மீண்டும் வந்து  நெஞ்சை கணக்குமாறு செய்ய வேண்டியிருந்தது. அப்பானு இத்தனை நாள் நினைக்கலனா எப்படி எந்த உரிமையில் அவரோட காசுல வாழ்ந்துகிட்டு இருக்கோம், இதெல்லாம் எல்லா அப்பாக்களும் செய்ய வேண்டிய கடமைதானே என்று உள்ளூர இருந்த அசைக்கமுடியாத எண்ணம்தானே. கைவிடப்பட்டு தனிமையாகிவிட்டோம் என்ற எண்ணம் இருந்தாலும் கயிற்றின் அறாத பிரிபோல சிறு நம்பிக்கைத் தழல் உள்ளே கனன்று கொண்டிருப்பது அவர் இருக்கிறார் என்ற உள்ளுணர்வுதானே. பின்னே யார் செய்த பிழை இது.வில்லன் நானேதானோ.எளிதில் ஒப்புக்கொள்ள முடியாதுதான், இன்று அழுதாக வேண்டுமாதலால் இதுவும் உதவலாம் ஆனால் இது மட்டும் போதாது.

அப்பாவிடம் தான் கூறிய வார்த்தைகளின் கடுமையை நினைத்தான். அதனாலா இல்லை எங்கோ மனதின் அடி ஆழத்திலிருந்து எல்லாம் தன்னுடைய தவறாகுமோ என்று எழுந்த குற்ற உணர்வாலா இல்லை தன்னிரக்கத்தாலா இல்லை சினிமாவில் அந்த நாயகன் அழும் காட்சியை நினைத்துப் பார்த்ததாலா எதுவென்று தெரியாமல் வாயை கையால் பொத்திக்கொண்டு உடைந்து அழத் தொடங்கினான். 

No comments:

Related Posts

  • Bloggers Intro #7: Aravind
    07.02.2014 - 0 Comments
    Aravind Hi guys, I'm new to blogging world and I've always wanted to write about my perspectives…
  • Short Stories #7: Step Up
    03.04.2014 - 0 Comments
    He stepped down from the dais. The crowd gave him a standing ovation. People admired him for his…
  • Life art #1: You are tired of your job. Aren't You? Here's what you can do
    23.03.2014 - 6 Comments
    This post is specifically targeted at people in the 25-30 age group. The unmarried ones. We have…
  • Movie Review #4: Gravity(2014) - English
    06.04.2014 - 0 Comments
    Gravity is an experience rather than a mere viewing.  Its one of the rarest of movies that…
  • சிறுகதைகள் #3: நொந்தகுமாரன் கலம்பகம்
    09.03.2014 - 0 Comments
    'அப்பானு ஒன்னெலாம் சொல்லி ரொம்ப நாளாச்சி, வெளிலதான் வா,போனு சும்மா கூப்பிட்றேன், உள்ளுக்குள்ள அந்த…