Sunday 9 March 2014

தமிழ்க்கவிதைகள் #3 : ஊமையாகிப் போன அலைபேசி


காலையிலிருந்து
அழைப்பே வராத
அலைபேசி வைத்திருப்பவனின்
அலைபேசியில்
548 எண்கள் இருக்கின்றன..

ஒரு வீட்டுமனை
வாங்கச் சொல்லுமொருத்தி..
உணவுக்கு காசில்லை எனினும்
உடலை சீர்செய்ய அழைக்குமொருத்தி..
மிகுதியாய் இருக்கும் பணத்தை
முதலிடச் சொல்லி 
கொஞ்சுமொருத்தி..
இவர்கள் யாவருக்கும்
அவனது எண் தெரியாமல்
போனதுதான் அவனது துக்கம்..

நடக்கையில் எதிர்ப்படும்
வேண்டாத நண்பரைத் தவிர்க்க
பொய்யான அழைப்பை
புனைந்து பேசியபடி
அந்த நண்பரிடம்
அப்புறம் பேசுகிறேன் என
ஜாடை செய்துவிட்டு
கடந்து பல நிமிடம் ஆனபின்னும்
கற்பனை அழைப்போடு
பேசியபடியேதான் இருக்கிறான் அவன்..

உணவு தராதவர்கள்
வேலை தராதவர்கள்
வேலை பார்த்தும்
கூலி தராதவர்கள்
இவர்களனைவரையும் விட
அவனை அழைக்காதவர்கள் மீது
கடுங்கோபம் வருகிறது அவனுக்கு..

என்றாவது ஒரு நாள்
யாராவதொருவர்
அழைத்துவிடுவார்களென்றே
இதுவரை அழிக்காமலிருக்கிறான்
அந்த எண்களை..

ஒரு முத்தமில்லை..
ஒரு கைகுலுக்கலில்லை..
அன்போடு பார்க்கும்
ஒரு பார்வை கூட இல்லை..
இவனே என அழைக்கும்
பெயரழைப்பும் இல்லை..

இவையனைத்தையும் விட
அலைபேசியில் அழைக்க
யாருககும் மனமில்லை..

ஊமையாகிப் போன
அலைபேசியில்
அழைப்பொலியாக
அம்மாவென்றழைக்காத
பாடலை வைத்திருக்குமவன்
தினந்தோறும் பெரு நம்பிக்கையுடன்
தன் அலைபேசியை
பார்த்தபடியிருக்கிறான்
ஏதாவதொரு அழைப்புக்காக..

விடிந்தும் இருண்டும் கடக்கும்
இந்த
ஏதாவதொரு நாளின் ஒரு ◌பொழுதில்
யாரேனும்
நிச்சயமாக யாரேனும்
தவறுதலாகவேனும் அழைத்துவிடக் கூடும்
என்பதால்தான்
உடைக்காமல்
எரிக்காமல்
நொறுக்காமல்
வைத்திருக்கிறான்
தன்
அலைபேசியை..

உலர்ந்த இதழ் நீட்டி
முத்தத்துககாக
காத்திருக்கிறதொரு
சூழல் அறியா
அலைபேசி..



No comments:

Related Posts